தண்டேவாடா: சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் வனப்பகுதியில்நேற்று நடைபெற்ற என்கவுன்ட்டரில் 36 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். அவர்களிடம் இருந்த ஏ.கே.47, எஸ்எல்ஆர் ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் வனப் பகுதி, கோவா மாநிலம் அளவுக்கு மிகப் பெரிய பகுதி. இது மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதி. இங்கு பாதுகாப்பு படையினர் பல முறை தேடுதல் வேட்டைநடத்தி, 50 சதவீத பகுதியை அதாவது சுமார் 4000 சதுர கி.மீ பகுதியை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வனப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக, நக்சல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள சிறப்பு படைப் பிரிவுக்கு (டிஆர்ஜி)உளவுத் தகவல் கிடைத்தது. இந்தப்படைப்பிரிவில், சரணடைந்த மாவோயிஸ்ட்களும் இடம்பெற்றுள்ளனர். இதையடுத்து பல்வேறு போலீஸ் முகாம்களில் இருந்து போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது கோவல்-நெந்தூர்-துல்துளி கிராமங்கள் அமைந்துள்ள அபுஜ்மத் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நேற்று மதியம் 12.30 மணியளவில் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. மாவோயிஸ்ட்களை சரணடையும்படி போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்கள் சரணடையாமல், வனப் பகுதிக்குள் ஓடினர். அவர்களை போலீஸார் விரட்டிச் சென்று துப்பாக்கி சூடு நடத்தியதில் 36 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.
அவர்களிடம் இருந்த ஏகே 47, எஸ்எல்ஆர் ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. அங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த என்கவுன்ட்டரில் பாதுகாப்பு படையினருக்கு எந்த சேதமும், உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதனால் இது பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டர்களில் மிகவும் வெற்றிகரமானதாக கருதப்படுகிறது.
சத்தீஸ்கரில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற என்கவுன்ட்டரில் 6 பெண்கள் உட்பட 9 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். இத்துடன் சத்தீஸ்கரில் இந்தாண்டு நடைபெற்ற என்கவுன்ட்டரில் உயிரிழந்த மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது. இதில் பாதுகாப்பு படையினர் 15 பேரும், பொதுமக்கள் 47 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.