சென்னை: தமிழகத்தில் மகப்பேறு, குழந்தை இறப்பை பூஜ்ஜியத்துக்கு கொண்டு வருவதற்காக 4 புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை அடையாறு சமுதாய நகர்ப்புற நல மருத்துவமனையில் 2024-25-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ், இந்திய மருத்துவம் மற்றும்ஓமியோபதி இயக்குநர் விஜயலட்சுமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ஜெ.ராஜமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் பிறவி குறைபாடுகளைக் கண்டறிய 1,000 அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பச்சிளங் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நலனை கண்காணிக்க சிறப்பு மையங்கள் 400 இடங்களில் தொடங்கப்படுள்ளன. இதன்மூலம், அனைத்து குழந்தைகளுக்கும் பிறவிக் குறைபாடுகள் கண்டறிவது, ஆரம்ப கட்டங்களில் கண்டறியப்பட்ட குறைபாடுகளுக்கு தீர்வு காணப்படும்.
சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவிலிருந்து விடுவிக்கப்படும் குறைப்பிரசவம் மற்றும் எடை குறைவான பச்சிளம் குழந்தைகளை தொடர்ந்து அவர்களது இல்லங்களிலேயே தொழில்நுட்ப உதவியோடு கண்காணிப்பதற்கான முன்னோடித் திட்டம் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஆரம்பகால குழந்தை வளர்ச்சிக்கான ‘பெற்றோர் பயன்பாட்டு செயலி’ தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், சுகாதார செய்திகள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து செய்திகள்,கர்ப்பம் மற்றும் பிரசவகாலம் பற்றியசெய்திகள், பிரசவத்துக்கு பின் கவனிப்புமற்றும் பிறந்த குழந்தையின் வளர்ச்சியை பற்றிய கண்காணிப்பு, குழந்தைபராமரிப்பு பற்றி தெரிந்து கொள்ளுதல்தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை அறிதல் போன்ற அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு குழந்தைநலத் திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் 1,000 பிறப்புகளுக்கு 10.2 ஆக இருந்த குழந்தை இறப்பு விகிதம் 8 ஆக குறைந்துள்ளதாக சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு தெரிவித்துள்ளது. மகப்பேறு மரணம் 1 லட்சம் மகப்பேறுக்கு தமிழகம் 40.2 ஆக உள்ளது.
இந்த இரண்டு இறப்பு விகிதங்களும் பூஜ்ஜியம் நிலைக்கு செல்வதற்கு இந்த 4 புதிய திட்டங்களும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான டிபிடி தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சொல்வது தவறானது.
மத்திய அரசு 20 லட்சம் தடுப்பூசிகள் தர வேண்டும், இதுவரை 9 லட்சம் தடுப்பூசிகளை கொடுத்துள்ளது. தற்போது 3.26 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் 7 பேர் டெங்குவால் இறந்துள்ளனர். மருத்துவமனைக்கு வராமல் வீடுகளிலேயே சிகிச்சை பெறுவது போன்றகாரணங்களினால்தான் இந்த 7 இறப்புகளும் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.