சென்னை: சென்னை தரமணியில் உள்ள ஏசியன் இதழியல் கல்லூரி மற்றும் இந்திய நீதி அறிக்கை அமைப்பின் சார்பில் இந்திய சிறை அமைப்புகள் குறித்த குழு கலந்துரையாடல் ஏசியன் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில், ஏசியன் இதழியல்கல்லூரித் தலைவர் சசிக்குமார் வரவேற்றார். இந்திய சிறைகளின் இன்றைய கட்டமைப்புகள் மற்றும்அதற்கான நிதி ஒதுக்கீடு, கைதிகளின் எண்ணிக்கை, மறுவாழ்வு குறித்த ஆய்வு அறிக்கையை இந்தியநீதி அறிக்கையின் முதன்மை ஆசிரியர் மஜா தருவாலா சமர்ப்பித்தார்.அதைத் தொடர்ந்து, ‘சிறை சீர்திருத்தத்துக்கான பாதைகள்’ என்றதலைப்பில் ஒடிசா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதர் பங்கேற்று பேசியதாவது:
நீதி அமைப்பு என்பது பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலும், நம்பிக்கையைப் பெறும் வகையிலும் இருக்க வேண்டும். சீர்திருத்தும் மையங்களாக சிறைச்சாலைகள் மாற வேண்டும். சிறைகளில் அதிகப்படியான கைதிகளின் எண்ணிக்கை, தாமதமாகும் விசாரணை, தேவையான உதவிகள் கிடைக்கப்பெறாமை, தனிமைவாசம் போன்றவற்றால் கைதிகள் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
சிறைக்கு உள்ளே, வெளியே அவர்களுக்கான மறுவாழ்வு கேள்விக்குறியாகவே உள்ளது.இந்நிலை மாற வேண்டும். கைதிகளுக்கான பிரச்சினையை காது கொடுத்துகேட்க சரியான அமைப்பு முறைகள்இல்லை. கைதிகளுக்கு ஜாமீன்வழங்க மறுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் பலமுறை சுட்டிக்காட்டி யும் கீழமை நீதிமன்றங்கள் அதை ஏற்க மறுக்கின்றன. கைதிகளிடம் நல்ல மனமாற்றத்தை ஏற்படுத்தி மறுவாழ்வு அளிக்க திறந்தவெளி சிறைச்சாலைகளே ஆகச்சிறந்த தீர்வாக இருக்கும், இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி முக்தா ஜெ.குப்தா பேசியதாவது: குற்றச்செயல்களுக்காக தண்டனை அனுபவிக்கும் கைதிகளையும் சக மனிதர்களாகப் பாவித்து அவர்களின் அடிப்படை உரிமைகளும், கண்ணியமும், மாண்பும் காக்கப்பட வேண்டும். பாரதிய நகரிக் சுரக்க்ஷா சங்கீதாவில் தற்போது சிறுசிறு குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதற்குப் பதிலாக சமுதாய சேவைகள் புரிய உத்தரவிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறைக்குச் செல்லும் கைதிகளின் குடும்பம் நிர்கதியாகி அவர்களின் சமூக அந்தஸ்தும் நிர்மூலமாகி விடுகிறது.
காணொலி காட்சி விசாரணை, டிஜிட்டல் சாட்சியங்கள், நாட்டில் எங்கு வேண்டுமென்றாலும் எப்ஐஆர்பதிவு செய்து பின்னர் மாற்றிக் கொள்ளலாம் போன்றவற்றால் கைதிகள் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. நீதிபதிகள் கைதிகளுடன்நேருக்கு நேராக உரையாடினால்மட்டுமே அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளும், மன நிம்மதியும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில், மும்பை குற்றவியல் மற்றும் நீதி மையத்தின் பேராசிரியர் டாக்டர் விஜய் ராகவன், இந்திய நீதி அறிக்கை உதவி ஆசிரியர் வலாய் சிங், ஹைதராபாத் மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான அணுகல் அமைப்பின் பேராசிரியர் முரளி கர்ணம் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். நிறைவாக, ஏசியன் இதழியல் கல்லூரி ஆசிரியர் சவுமியா அசோக் நன்றி கூறினார்.