பாரீஸ்: காசாவில் பயன்படுத்துவதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதம் விநியோகிப்பதை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியிருப்பதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த முன்மொழிவை அவர் அவமானம் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து சனிக்கிழமை பெஞ்சமின் நெதன்யாகு சனிக்கிழமை வீடியோ மெசேஜ் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “ஈரான் தலைமையிலான காட்டுமிராண்டிதனத்துக்கு எதிரான இஸ்ரேலின் போராட்டத்துக்கு உலகின் நாகரீக நாடுகள் அனைத்தும் உறுதுணையாக இருக்க வேண்டும். என்றாலும், பிரான்ஸ் அதிபர் மக்ரோன் மற்றும் மற்ற ஐரோப்பிய தலைவர்கள் தற்போது இஸ்ரேலுக்கு எதிராக ஆயுத தடைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது அவர்களுக்கு அவமானம்.
காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லாக்கள், யேமனில் ஹூதிகள், ஈராக் மற்றும் சிரியாவில் ஷியா போராளிகள் மற்றும் மேற்கு கரையில் பயங்கரவாதிகள் என இஸ்ரேல் பல முனைகளில் தீவிரவாதத்துக்கு எதிராக போராடி வருகிறது.
ஈரான் அதன் நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கட்டுப்படுத்தியிருக்கிறதா?. நிச்சமாக இல்லை. இந்தத் தீவிரவாத அச்சுகள் எல்லாம் இப்போது ஒன்றாக இணைந்துள்ளன. ஆனால், தீவிரவாதத்தின் இந்த அச்சுறுத்தல்களை எதிர்ப்பதாக கூறும் நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுத தடையை கோருகின்றன. என்னவொரு அவமானம்.
அவர்களின் ஆதரவு இருந்தாலும் இல்லா விட்டாலும் போரில் இஸ்ரேல் வெற்றி பெறும். ஆனால் எங்களின் வெற்றிக்கு பின்னரும் அவர்களின் அவமானம் நீண்டகாலம் தொடரும்.” இவ்வாறு நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
முன்னதாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அளித்த பேட்டியில், “இன்று நாம் அரசியல் தீர்வை நோக்கி திரும்புவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், காசாவில் போரிடுவதற்கான ஆயுதங்கள் வழங்குவதை நாம் நிறுத்த வேண்டும். பிரான்ஸ் எதையும் வழங்கவில்லை. லெபனான் புதிய காசாவாக மாறக்கூடாது. போர் வெறுப்பையே விதைக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே நெதன்யாகுவின் கண்டன செய்திக்கு பின்னர் இமானுவேல் மேக்ரான் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பிரான்ஸ் இஸ்ரேலின் உறுதியான நண்பன். நெதன்யாகுவின் கருத்துக்கள், இரு நாடுகளுக்கு இடையேயான அதிகப்படியான நட்பில் இருந்து விலகியவையே என்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், காசாவில் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் நடுநிலையாளராக உள்ள கத்தார், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் பேச்சை பாராட்டியுள்ளது. மேலும், இது போரை நிறுத்துவதற்கான முக்கியமான மற்றும் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்று தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அதிபரின் கருத்தினை வரவேற்றுள்ள ஜோர்டான், இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதி முற்றிலுமாக தடைசெய்யப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.