பெண்ணை சூறையாடிய 50 பேர்; விசாரணையின்போது கற்பழிப்பு வீடியோவை பொதுமக்களும் பார்க்க கோர்ட்டு அனுமதி

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டில் வசித்து வருபவர் கிஸ்செல் பெலிகோட். இவருடைய கணவர் டாமினிக் பெலிகோட். கிஸ்செல்லை கணவர் டாமினிக் ஏறக்குறைய 10 ஆண்டுகளாக அவருக்கே தெரியாமல், வீட்டில் மயக்க மருந்து கொடுத்து படுக்க வைத்து, சுயநினைவு இல்லாத நிலையிலேயே, வெளியாட்களை அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்ய வைத்திருக்கிறார்.

இதனை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் படம் பிடித்தும் வைத்து கொண்டார். இந்த விவரம் போலீசாருக்கு சமீபத்திலேயே தெரிய வந்தது. 2020-ம் ஆண்டில் சூப்பர்மார்க்கெட் ஒன்றில் 3 பெண்களின் உள்ளாடைகளுக்குள் அவர்களுக்கு தெரியாத வகையில், ரகசிய கேமிரா கொண்டு டாமினிக் படம் பிடித்து கொண்டிருந்தபோது, விவரம் அறிந்து வந்த போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதன்பின்னர், அவருடைய கணினியை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அதில், மனைவியை அவர் சித்ரவதை செய்த விவரம் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த விவரம் கிஸ்செல்லுக்கு தெரிய வந்ததும், கடந்த ஆகஸ்டில், கணவரிடம் இருந்து கிஸ்செல் விவாகரத்து பெற்றார். அவர், கணவர் டாமினிக்குக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் அடையாளம் வெளியே தெரிவதற்கு தொடர்புடைய நபர்கள் விரும்புவதில்லை. ஆனால், பாலியல் துன்புறுத்தல் மற்றும் போதை பொருட்களை பயன்படுத்தி துன்புறுத்துதல் போன்ற விசயங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் வெளிப்படையான விசாரணை வேண்டும் என கோரியுள்ளார்.

அவருடைய இந்த துணிச்சலை பாராட்டி நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் மார்சீல்லே நகரில் இருந்து பாரீஸ் நகர் வரை கடந்த செப்டம்பர் மாத மத்தியில் பேரணியாக சென்று ஆதரவை வெளிப்படுத்தினர். கிஸ்செல்லை, பலமுறை இதுபோன்று யாரென்றே தெரியாத வழிபோக்கர்களாக இருந்த பலரையும் வீட்டுக்கு கொண்டு வந்து கிஸ்செல்லின் கணவர் பலாத்காரம் செய்ய வைத்திருக்கிறார். இவற்றை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாகவும் எடுத்து வைத்துள்ளார்.

இதனை விசாரணையின்போது, கணவர் ஒப்பு கொண்டிருக்கிறார். இந்த வழக்கில் கணவர் உள்பட 51 பேர் கிஸ்செல்லை உடல்ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணை நடந்து வருகிறது. கணினியில் 200-க்கும் மேற்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அவற்றில் பல வீடியோக்களில் கணவர் டாமினிக்கும் மற்றும் 90-க்கும் மேற்பட்ட சம்பவங்களில் வெளியாட்களும் இடம் பெற்று உள்ளனர் என விசாரணை அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கின் வீடியோ சான்றுகள் திரையிடப்படும்போது, அதனை பொதுமக்களும், ஊடகங்களும் பார்க்க வசதிகள் செய்யப்பட வேண்டும் என கிஸ்செல் பெலிகோட் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

ஆனால், அதற்கு நீதிபதிகள் தொடக்கத்தில் மறுப்பு தெரிவித்தனர். இந்த புகைப்படங்கள் அதிர்ச்சி தருபவை. வழக்கு விசாரணையில் தொடர்புடையவர்கள் மற்றும் கோர்ட்டு முன்னிலையிலேயே அவை வெளியிடப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால், பாலியல் துன்புறுத்தலில் போதை பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் தீங்கு பற்றி மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அதனால் விசாரணையை வெளிப்படையாக நடத்த வேண்டும் என கிஸ்செல்லின் வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்தே, வீடியோ சான்றுகள் திரையிடப்படும்போது, பொதுமக்களும் இருக்கலாம் என்ற உத்தரவை கோர்ட்டு பிறப்பித்து உள்ளது. நீதிபதி ரோஜர் அராடா பிறப்பித்த இந்த உத்தரவை தங்களுக்கு கிடைத்த வெற்றி என கிஸ்செல்லின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதன்படி, விசாரணை பகுதிக்கு அருகே அமைந்த அறையானது இதற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த அறையில் பொதுமக்கள் அமர்ந்து, விசாரணையை நேரலையில் பார்க்க வசதி செய்யப்பட்டு உள்ளது. எனினும், வீடியோவானது தொடர்ச்சியாக வெளியிடப்படாது என்றும் உண்மை வெளிப்பட வேண்டும் என்ற கடுமையான தேவையேற்படும்போது, வீடியோ காட்சி வெளியாகும் என்றும் அதுவும் விசாரணையில் தொடர்புடையவர்கள் ஒருவர் வேண்டுகோளின்படியே நடைபெறும் என்றும் நீதிபதி அராடா கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டு சட்டப்படி, கற்பழிப்பில் பாதிக்கப்பட்டவர்கள், விசாரணையை பொதுவெளியில் நடத்துவது அல்லது வேண்டாம் என முடிவு செய்வதற்கான உரிமை கடந்த 40 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது என கிஸ்செல்லின் வழக்கறிஞர் ஸ்டீபன் பபூனி கூறியுள்ளார்.

72 வயதுடைய கிஸ்செல் பெலிகோட் மற்றும் கணவர் டாமினிக் பெலிகோட் (வயது 71), மஜான் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஒரு பெண் உள்பட 3 வாரிசுகள் உள்ளனர். 7 பேரக்குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், 10 ஆண்டுகளாக நடந்த இந்த கொடூர சம்பவம் விசாரணைக்கு வந்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்த கொடூர சம்பவத்தில், குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க கூடும். டாமினிக் உள்ளிட்ட 18 பேர் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். மற்ற 32 பேர் வழக்கை எதிர்கொண்டு, கோர்ட்டுக்கு வந்து, சென்று கொண்டு இருக்கின்றனர். ஒருவர் சிக்காமல் தப்பியுள்ளார். டாமினிக் மற்றும் குற்றவாளிகளில் சிலர் நடந்த விவரங்களை ஒப்பு கொண்டுள்ளனர். எனினும், வேறு சிலர் கூறும்போது, டாமினிக்கின் மனைவி தூங்கி கொண்டிருக்கிறார் என நினைத்தோம் என்றும் ஒரு சிலர் இது ஒப்புதலுடனேயே நடைபெறுகிறது என நினைத்தோம் என விசாரணையில் கூறியுள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.