India vs Bangladesh T20 News Tamil : இந்தியா – வங்கதேச அணிகளுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டி இன்று குவாலியரில் நடக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் முதன் முதலாக இரட்டை சதம் அடித்த இந்த மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும். இப்போட்டியை ஜியோ சினிமா மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 சேனல்களில் நேரடியாக காணலாம். இப்போட்டியில் இந்திய அணிக்காக இளம் வீரர், வேகத்தில் இந்தியாவின் பிரெட் லீ என கூறப்படும் மயங்க் யாதவ் அறிமுகமாக இருக்கிறார். ஐபிஎல் 2024 தொடரின்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் விளையாடிய மயங்க் யாதவ் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் அற்புதமாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆனால், காயம் காரணமாக அந்த ஐபிஎல் தொடர் முழுமைக்கும் அவரால் விளையாட முடியவில்லை.
மயங்க் யாதவ் அறிமுகம்
விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என கூறப்பட்ட நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம்பிடித்திருக்கிறார். அவருக்கு இன்றைய போட்டி தான் இந்திய அணிக்காக விளையாடப்போகும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி. இப்போட்டியில் அவரின் பந்துவீச்சு எப்படி இருக்கும் என இந்திய அணி கிரிக்கெட் நிர்வாகம் உற்றுநோக்க இருக்கிறது. வங்கதேச அணிக்கு எதிரான தொடர் முழுவதும் மயங்க் யாதவ் சிறப்பாக செயல்பட்டால், அடுத்தடுத்த தொடர்களில் பும்ராவுடன் இணைந்து பந்துவீச வாய்ப்பு கிடைக்கும்.
மயங்க் யாதவ் தவிர, டெல்லி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா மற்றும் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் பங்களாதேஷுக்கு எதிரான இந்த டி20 சர்வதேச தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமாகும் வாய்ப்பைப் பெறலாம். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு, ஷுப்மான் கில், ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோருக்கு வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபர் 16 முதல் நவம்பர் 1 வரை நடைபெறுகிறது.
சிவம் துபே விலகல்
வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவரைத் தவிர, டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த அர்ஷ்தீப் சிங்கும் இந்தத் தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டர் சிவம் துபே காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர் இப்போது பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
சஞ்சு சாம்சன் ஓப்பனிங்
ஷிவம் துபேவுக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் திலக் வர்மா வங்காளதேசத்திற்கு எதிரான T20 தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், சன்ரைசர்ஸ் அணியில் கடந்த ஐபிஎல் போட்டியில் அற்புதமாக விளையாடிய அபிஷேக் சர்மா போன்ற இளம் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வங்கதேச தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் விளையாடியபோது அபிஷேக் சர்மா சதம் அடித்திருந்தார். அவர் இப்போட்டியிலும் ஓப்பனிங் இறங்கும் நிலையில், அவருடன் சேர்ந்து சஞ்சு சாம்சன் இன்னிங்ஸை தொடங்க இருக்கிறார். வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. ரிசர்வ் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் இதுவரை கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்த தவறவிட்டுள்ளதால், ஜிதேஷ் இன்றைய போட்டியில் களமிறங்க வாய்ப்பில்லை.