Air Show: `சுட்டெரிக்கும் வெயிலில் தவித்த மக்கள்; குடிநீர் வசதிகூட இல்லை…' – ஜெயக்குமார் விமர்சனம்

இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக ‘விமான சாகச நிகழ்ச்சி (Air Show)’ இன்று சென்னை மெரினாவில் நடைபெற்றது.

காலை சுமார் 11 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடைபெற்றது. விமானப்படை தலைமை தளபதி ஏ.பி சிங், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் மற்றும் பல்வேறு விமானப் படை அதிகாரிகள், காவல் அதிகாரிகள் பலர் சிறப்பு விருந்தினர்களாக இவ்விழாவில் கலந்துகொண்டிருந்தனர்.

சுமார் 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையிலும், 5 லட்சம் பேர் மெரினா சாலை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் நின்று இந்நிகழ்ச்சியை நேரில் கண்டு களித்தனர். கிட்டத்தட்ட மொத்தம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மெரினாவில் குவிந்ததாகக் கூறப்படுகிறது. ‘உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி’ என்பதற்காக இந்த நிகழ்ச்சி தற்போது லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடிக்க உள்ளது. 

இதற்கிடையில் போக்குவரத்து நெரிசலால் ஆயிரக்கணக்கானோர் இந்நிகழ்ச்சிக்கு வரமுடியாமல் போனது. மெட்ரோ, பறக்கும் ரயில், பேருந்து நிலையம் என பல்வேறு போக்குவரத்து இடங்களில் மக்கள் திரளாக ஒரே நேரத்தில் குவிந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதுமட்டுமன்றி, மெரினாவில் கூடியிருந்தவர்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக வெயிலில் நின்றவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு, தவித்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த லட்சக் கணக்கானோரால் வீட்டிற்குத் திரும்ப முடியாமல், கூட்டத்தில் சிக்கி மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர். இந்த நெரிசலில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாடு அரசை விமர்சித்திருக்கும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது. குடிநீர், உணவு, தற்காலிக கழப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தபடவில்லை. இரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆனால் ஸ்டாலின் பேருந்துகளை காணவில்லை. முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன! இரண்டு‌ நாட்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தார். காவல்துறையினருக்கு அதிக வேலையும் அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது! நிர்வாகம், கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதலமைச்சராக தான் ஸ்டாலின் உள்ளார்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்த விவகாரம் பெரும்பேசுபொருளாக சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. `தமிழ்நாடு அரசின் கவனக் குறைவு’ என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.