இந்திய குடிமகனாக நம் எல்லோருக்கும் ஆதார் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், மனிதருக்கு மட்டுமல்லாமல், மனிதர்களின் சொத்தாக கருதப்படும் நிலத்துக்கும் இப்போது கொண்டுவரப்பட உள்ளது. BHU ஆதார் என்று சொல்லப்படும் இதைபற்றி வழக்கறிஞர் ஷ்யாம் சுந்தர் பேசினார்.
BHU ஆதார் என்றால் என்ன?
BHU என்பது பூமியை குறிக்கும். ஒவ்வொரு மனிதருக்கும், நிறுவனத்துக்கும் ஆதார் இருப்பது போல, தற்போது ஒவ்வொரு நிலத்துக்கும் ஆதார் கொண்டுவரப்பட உள்ளது. இந்த ஆதார் 16 இலக்கம் கொண்ட குறியீட்டினை கொண்டிருக்கும். அந்த குறியீட்டில், அந்த நிலம் அமைந்துள்ள மாவட்டம், கிராமம், தாலுகா ஆகியவையோடு, நிலத்தின் வகைப்பாடு, நிலத்தின் உரிமையாளரை குறிப்பிடும் வகையில் அந்த குறியீடு அமைக்கப்படும். BHU ஆதாருக்கு முன்னோடி கர்நாடக அரசு.
2000-ம் ஆண்டு கர்நாடக அரசுதான் முதன்முதலில் நிலப் பதிவுகளை கணினிமயமாக்கத் தொடங்கியது. 2001-ம் ஆண்டு சந்திரபாபு தலைமையிலான ஆந்திரவும், அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசும் இதனை பின்தொடர்ந்தது. இதற்கு மத்திய அரசு அப்போது எந்த நிதி உதவியும் செய்யவில்லை. மாநில அரசுகளின் இந்த கணினிமயமாக்கும் பணி ஆரம்பத்தில் கிராமங்களில்தான் தொடங்கக்கப்பட்டது. இதனை முடிக்க மூன்று அரசுகளுக்கும் 6 ஆண்டுகள் தேவைப்பட்டது.
இந்த மூன்று மாநில அரசுகளின் கணினிமயமாக்கத்தை மேற்கோள் காட்டி, 2008-ல் இந்திய அரசு நிலத்தை டிஜிட்டல் மையமாக்க மற்ற மாநிலங்களிடம் கேட்டு கொண்டது. அதற்கான நிதி உதவியும் வழங்கியது. தற்போது 24 மாநிலங்களில் நிலபதிவு கணினிமயமாக்கப்பட்டுள்ளது. BHU ஆதார் ஆந்திரத்தில் கிட்டத்தட்ட கொண்டுவரப்பட்டுவிட்டது. அங்கு இப்போது வருவாய் துறை மற்றும் பத்திரபதிவு துறை ஆகியவற்றின் பதிவுகளை ஒருங்கிணைத்துவிட்ட காரணத்தால், ஆதார் எண்ணை கொண்டே நிலப்பதிவு சார்ந்த விவரங்களை எடுக்க முடியும்.
BHU ஆதார் ஏன் கொண்டுவர வேண்டும்?
இந்தியாவின் ஒவ்வொரு நிலமும் தனித்துவத்தோடு இருக்கவேண்டும் என்பதுதான் BHU ஆதாரின் நோக்கம். BHU ஆதாரின் மூலம் ஒவ்வொரு நிலத்துக்கும் தனி குறியீடு கொடுக்கப்படும்போது, சொத்து சார்ந்த பல மோசடிகள் குறையும். BHU ஆதாரில் சொத்து வரியையும் மற்றும் நிலங்களின் உட்பிரிவையும் இணைத்தால் நில ஆக்கிரமிப்பு போன்ற பிரச்னைகள் வராது.
ஏற்கெனவே உள்ள பல லட்ச வீடுகளுக்கு BHU ஆதார் எப்படி வழங்கப்படும்?
ஏற்கெனவே உள்ள வீடுகள், நிலத்தின் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண்ணுடனே பதிவு செய்யப்பட்டிருக்கும். அதனை கொண்டு BHU ஆதார் எண் அமைக்க முடியும். கூட்டு பட்டாவை பொறுத்தமட்டில், நிலத்தை தங்கள் உரிமையாளர்கள், விரிவாக்கத்தை கொண்டு உட்பிரிவு செய்யவேண்டிருக்கும். இனி பதிவு செய்யும் நிலங்களும் உட்பிரிவு செய்தே பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் எளிதாக BHU ஆதார் எண் உருவாக்க முடியும்.
BHU ஆதாரின் வேறு நன்மைகள் என்ன?
இப்போது பத்திரப்பதிவின்போது, நிலத்தில் உட்பிரிவு இல்லாத பட்சத்தில், நிலத்தின் உரிமத்தை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். நிலத்தில் உட்பிரிவு ஏற்படும் பட்சத்தில், ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக BHU ஆதார் எண் அமைக்கப்பட்டு உரிமம் மாற்றப்படும். அதனால் பெரும் சிக்கல்கள், குழப்பங்களை தவிர்க்கலாம்.
BHU ஆதார் முறை மூலம் பினாமி சொத்து முறை ஒழியுமா?
ஆந்திர போன்ற மாநிலங்களில் ஆதாரை கொண்டுதான் நிலப்பதிவு செய்யமுடியும் என்ற நிலை உள்ளது. இதனால் ஆந்திரவில் BHU ஆதாரையும், தனி நபரின் ஆதாரையும் இணைத்தாகிவிட்டது. ஆனால் இந்த அமைப்பு மற்ற மாநிலங்களில் இல்லை. மற்ற மாநிலங்களில் அதற்கான ஆர்வமும் காட்டப்படவில்லை. இந்த BHU ஆதார் திட்டம், பினாமி சொத்து பரிவர்த்தனை முறையை தடுக்கும். மேலும் இந்த BHU ஆதாரின் மூலம் நில உச்சவரம்பினையும் சரிவர கண்காணிக்க முடியும்.
தமிழ்நாட்டில் ஒருவர் அதிகபட்சம் 60 ஏக்கர் நிலம் வைத்திருக்க முடியும். BHU ஆதாரின் மூலம் பினாமி மற்றும் தனிநபர் சொத்து விவரங்கள் வெளிவருவதால், பினாமி மற்றும் நில உச்சவரம்பு மீறல் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும். நில உச்சவரம்பு திட்டத்தின் கீழ், வரம்புக்கு மேல் குவிக்கப்பட்ட நிலங்களை அந்த காலத்திலேயே கைப்பற்றி வீட்டு வசதி வாரியத்துக்கு அரசு பயன்படுத்தும். மேலும் இந்த நில உச்சவரம்பு கேரள, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இன்றும் கண்டிப்புடன் கடைபிடிக்கப்படுகிறது. இனி நிலங்களுக்கு BHU ஆதார் தனித்தனியே வழங்கப்படப்போவது உறுதி. ஆனால் அது உரிமையாளருடைய ஆதாருடன் இணைக்கப்படுமா என்பது கேள்விக்குறியே!
மேலும் விரிவான தகவல்களுக்கு கீழேயுள்ள வீடியோவை க்ளிக் செய்யவும்!