Doctor Vikatan: கடந்த மாதம் இரு கண்களுக்கும் கேட்டராக்ட் (cataract) அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அதன் பிறகு என் வலது கண்ணில் வலியை உணர்கிறேன். இதனால் இரவில் என்னால் தூங்க முடியவில்லை. மருத்துவர் சொன்னபடி சில நாள்களுக்கு வலி நிவாரணி எடுத்துக்கொண்டேன். சில டிராப்ஸ் உபயோகித்தேன். கண்களுக்கு வெந்நீர் மசாஜ் செய்யச் சொன்னார்… எல்லாவற்றையும் பின்பற்றியும் குணமாகவில்லை. இப்போது புதிதாக கண்களில் ஏதோ மிதப்பது போன்று உணர்கிறேன். நான் ரீடிங் கண்ணாடி பயன்படுத்துகிறேன். கண்களில் வலி தொடர என்ன காரணம்?
-Chandrasekar Shankar, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

கேட்டராக்ட் எனப்படும் கண்புரை அறுவை சிகிச்சை செய்த உடன், கண்களில் ஒருவித வலி இருப்பது சகஜம்தான். அதற்கு காரணம், இன்ட்ராகுலர் பிரஷர் (intraocular pressure) எனப்படும் உள்விழி அழுத்தம் அதிகரிப்பதுதான். அது மெள்ள மெள்ளக் குறைந்து விடும்.
ஒருவேளை உங்களுக்குச் செய்யப்பட்டது சற்றே சவாலான கேட்டராக்ட் அறுவை சிகிச்சையாக இருக்கலாம். உதாரணத்துக்கு, கண்புரையானது மிகவும் தடித்துப் போயிருக்கலாம், முதிர்ந்து போயிருக்கலாம். அந்நிலையில் அந்தக் கண்புரையை அகற்றுவதிலும், லென்ஸ் பொருத்துவதிலும் உங்கள் மருத்துவர் சவால்களை எதிர்கொண்டிருக்கலாம். கண்களில் வறட்சி ஏற்பட்டிருந்தாலும், அதன் விளைவாக நீங்கள் வலியை உணரலாம்.
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை நீங்கள், உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை சந்தித்து உங்கள் பிரச்னைகளைச் சொல்லி, தீர்வு என்ன என்று கேளுங்கள். உங்களுக்கு கேட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்தவர் என்ற முறையில் அவரால்தான் இந்த வலிக்கான சரியான விளக்கத்தையும் தீர்வையும் சொல்ல முடியும்.

கண்களில் ஏதோ மிதப்பது போல உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். விழிகளில் உள்ள லென்ஸுக்கும் விழித்திரைக்கும் இடையில் விட்ரியஸ் (vitreous) என்ற கண்ணாடி ஜெல் போன்ற படலம் இருக்கும். வயதாக, ஆக, இந்த விட்ரியஸ் ஜெல்லானது திரவ நிலைக்கு மாறும். கண்களை அசைக்கும்போது, இந்த விட்ரியஸ், கண்களின் மேலும் கீழும் போகலாம். அதனால்தான் ஏதோ மிதப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல கண்களில் ஏதோ மிதக்கும் உணர்வு இருப்பவர்கள் கண் மருத்துவரை அணுக வேண்டும். அவர் கண்களை டைலேட் செய்து பரிசோதனை செய்து பார்ப்பார். அதன் மூலம் விழித்திரையில் ஏதேனும் பிரச்னை உள்ளதா, ஓட்டையோ, கிழிசலோ உள்ளதா என்று பார்ப்பார். சீனியர் சிட்டிசன்களை பொறுத்தவரை 6 மாதங்களுக்கொரு முறை கண்களைப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.