Ind Vs Pak: காயமுற்ற ஹர்மன்; வின்னிங் ஷாட் அடித்த 'கனா' கிரிக்கெட்டர்; பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

‘தோல்வியை விட தோல்வியிலிருந்து மீண்டு வருவதுதான் ரொம்பவே முக்கியம். நாங்களும் அதைப் பற்றிதான் அதிகமாக பேசியிருக்கிறோம். இது பாசிட்டிவ்வான கிரிக்கெட்டை ஆடுவதற்கான நேரம்!’ என அமீரகத்தில் நடந்து வரும் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேசியிருந்தார். சொன்னதைப் போலவே நன்றாக ஆடி பாகிஸ்தானை இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெல்லவும் செய்திருக்கிறது.

India

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தங்களின் முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக தோற்றிருந்தது. அதனால் அரையிறுதிக்கு செல்ல வேண்டுமெனில் எஞ்சியிருக்கும் போட்டிகளையெல்லாம் வெல்ல வேண்டும் என்ற நிலைக்கு இந்திய அணி சென்றது. அதேநேரத்தில் பாகிஸ்தான் அணி தங்களின் முதல் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியாவை விட புள்ளிப்பட்டியலில் நல்ல நிலையில் இருந்தது. இந்நிலையில்தான் இரு அணிகளும் இன்று துபாயில் மோதியிருந்தன. முதல் போட்டியில் சேஸிங்கில் தோற்றதால் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்யத்தான் தாங்களும் விரும்பியதாக ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்தார். ஆனால், பாகிஸ்தான் டாஸை வெல்ல இந்தியாவுக்கு பௌலிங்தான் கிடைத்தது.

கடந்த போட்டியை விட இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக பந்து வீசியிருந்தனர். நியூசிலாந்துக்கு எதிரான அந்தப் போட்டியில் ஓப்பனர்கள் நின்று ஆடி நன்றாக ஸ்கோர் செய்திருந்தனர். இந்தியாவுக்கு பவர்ப்ளேயில் விக்கெட்டே கிடைத்திருக்காது. ஆனால், இந்தப் போட்டியில் பவர்ப்ளேக்குள்ளாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 29 ரன்களை மட்டுமே இந்திய பௌலர்கள் கொடுத்திருந்தனர். கீப்பரை ஸ்டம்புக்கு அருகே வைத்துவிட்டு ஒரு ஸ்லிப்பையும் டைட்டாக வைத்து ரேணுகா சிங் வீசிய இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே இந்தியாவுக்கு விக்கெட் கிடைத்தது. ஓப்பனர்களில் ஒருவரான குல் ஃபெரோஷா ரன் ஏதும் எடுக்காமல் போல்டாகி வெளியேறியிருந்தார்.

India

துபாய் மைதானம் பெரிதாக இருப்பதாலும் ஒரு சில சைடுகள் அதிக தூரம் இருப்பதாலும் பாகிஸ்தான் வீராங்கனைகள் அதற்கேற்ப தகவமைத்து ஆட திணறினர். இதே பிரச்னை இந்திய பேட்டர்களுக்குமே இருந்தது. இதனாலயே பாகிஸ்தானின் இன்னிங்ஸ் எங்குமே வேகம் எடுக்கவில்லை. ஸ்ரேயங்கா பாட்டீல், அருந்ததி ரெட்டி, ஆஷா ஷோபனா, தீப்தி என இந்தியாவின் அத்தனை பௌலர்களும் விக்கெட்டுகளை எடுத்தனர். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 105 ரன்களை எடுத்திருந்தது.

இந்தியாவுக்கு 106 ரன்கள் டார்கெட். வேகமாக இலக்கை எட்டி ரன்ரேட்டை இந்திய அணி அதிகப்படுத்த வேண்டும். அப்படி செய்தால்தான் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பும் பிரகாசமாகும். ஆனால், இந்திய அணி அதை மனதில் வைத்து ஆடியதாக தெரியவில்லை.

106 என்கிற டார்கெட்டை எட்ட 18.5 ஓவர்களை இந்திய அணி எடுத்துக் கொண்டது. இந்தியாவின் டாப் 3 பேட்டர்களான ஷெபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா என மூவரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 100 க்கு கீழாகத்தான் இருந்தது. ஸ்மிருதி சதியா இக்பாலின் பந்தில் 7 ரன்களில் அவுட் ஆகினார். இரண்டாவது விக்கெட்டுக்கு கூட்டணி அமைத்த ஷெபாலியும் ஜெமிமாவும் நிதானமாக பார்ட்னர்ஷிப்பை பில்ட் செய்தனர். இருவரும் இணைந்து 43 ரன்களை சேர்த்து பிரிந்தனர். வழக்கமாக அதிரடியாக ஆடும் ஷெபாலி இங்கே 35 பந்துகளில் 32 ரன்களை மட்டுமே எடுத்து பெரிய ஷாட்டுக்கு முயன்று ஒமைமா சொஹைலின் பந்தில் அவுட் ஆகினார். பாத்திமா வீசிய 16 வது ஓவர் ஆட்டத்தின் பரபரப்பை கூட்டியது. இந்த ஓவரில் ஜெமிமா, ரிச்சா என இருவருமே அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

கடைசி 4 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. 18.5 ஓவர்கள் வரை இலக்கை எட்ட இந்திய அணி எடுத்துக் கொண்டது. 18.4 வது ஓவரில் ஸ்டம்பிங்கை தவிர்க்கும் பொருட்டு ஹர்மன்ப்ரீத் கீழே விழுந்து அவுட் ஆகாமல் தப்பித்திருப்பார். ஆனால், இதனால் கழுத்தில் கொஞ்சம் அவருக்கு அசௌகர்யம் ஏற்பட்டது. காயம் மேலும் சீரியஸ் ஆகக்கூடாது என்பதால் ரிட்டையர் ஹர்ட் ஆகி வெளியே சென்றார். 18.5 வது ஓவரில் சஜானா என்கிற வீராங்கனை பேட்டிங்கிற்கு வந்தார். இவர் தமிழில் வெளியான ‘கனா’ படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே ஒரு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். அவருக்கு இதுதான் முதல் உலகக்கோப்பை. முதல் பந்தையே உள் வட்டத்திலிருந்த பீல்டர்களின் தலைக்கு மேல் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தாலும் இன்னும் இந்தியாவுக்கான சவால் தீரவில்லை. இன்னும் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை இந்திய அணி எதிர்கொண்டு வெல்ல வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.