சென்னை: இந்திய விமானப் படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற பிரம்மாண்டவான் சாகச நிகழ்ச்சியில் 72 விமானங்கள், பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின.
இந்திய விமானப் படையின் 92 ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக, சென்னையில் மிக பிரம்மாண்டமான வான் சாகச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மதியம் 1 மணிவரை நடந்தது. இதையொட்டி, காலை 8 மணி முதலே மெரினாவில் மக்கள் குவியத் தொடங்கினர். சென்னை மாநகர பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள், பறக்கும் ரயில் (எம்ஆர்டிஎஸ்), மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதியது. மெரினா பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
முதல் நிகழ்வாக, ஆக்ரா விமான பயிற்சி பள்ளியின் ஆகாஷ் கங்கா அணியை சேர்ந்த பாராசூட் வீரர்கள் 8,000 அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்தனர். எம்ஐ-70 ஹெலிகாப்டரில் இருந்து 28 கமாண்டோ வீரர்கள் குதித்து, ஒரு கட்டிடத்தில் எதிரிகளால் பிடித்து வைக்கப்பட்ட பிணை கைதிகளை மீட்கும் சாகசத்தை நிகழ்த்தினர்.
தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து இலகு ரக சேட்டக் ஹெலிகாப்டர்கள் மூலம் வீரர்கள் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி பாராசூட் மூலம் குதித்தனர். நவீன போர் விமானமான ‘சூப்பர்சானிக் ரஃபேல்’ வானில் தீப்பிழம்புகளை கக்கியபடி சென்றது.
விமானப் படையில் 1947-89 காலகட்டத்தில் முக்கிய பங்காற்றிய டகோட்டா, ஹார்வர்டு விமானங்கள் பட்டாம்பூச்சிகள்போல பறந்துவந்து திறமையை பறைசாற்றின. விமானப் படையில் சேர்க்கப்பட உள்ள எச்டிடி-40 என்ற பயிற்சி விமானம், வானில் குட்டிக் கரணம் அடித்தது. 4-வது தலைமுறை போர் விமானமான ‘மிராஜ் 2000’, பின்னால் வந்த 2 விமானங்களுக்கு நடுவானிலேயே எரிபொருளை நிரப்பிக் காட்டியது.
உள்நாட்டு தயாரிப்பான ‘தேஜஸ்’ போர் விமானம் வானில் குட்டிக் கரணம் அடித்தும், செங்குத்தாக பறந்தும், ‘ரிவர்ஸில்’ சென்றும் சாகசம் நிகழ்த்தி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
மிகப் பெரிய போர் விமானமான சி-17 விமானத்தை பின் தொடர்ந்து விமானத்தில் வந்த சூர்யகிரண் ஏரோபாடிக் டீம் வானில் சாகசத்தில் ஈடுபட்டன. இந்த சாகசத்தில் ஈடுபட்ட 9 விமானங்களில் ஒரு விமானத்தை சென்னையை சேர்ந்த அஜய் என்ற விமானி இயக்கினார். இந்த விமானங்கள் வானில் ஏரோடைனமிக் சாகசத்தில் ஈடுபட்டன. வானில் ஒரேஇடத்தில் நிற்கும் அளவுக்கு மிக மெதுவான வேகத்தில் வந்து சாகசம் செய்தது. வானில் புகையை கக்கியபடி இதயம் போன்ற வடிவத்தை ஏற்படுத்தியது.
அடுத்ததாக, சாரங் ஹெலிகாப்டர்களின் ஏரோபாடிக் சாகசம் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில் பங்கேற்ற 5 ஹெலிகாப்டர்களில் ஒரு ஹெலிகாப்டரை தமிழகத்தை சேர்ந்த கோகுல் கிருஷ்ணா, அவினாஷ் ஆகிய 2 விமானிகள் இயக்கினர். வான் நடனத்தில் ஈடுபடக்கூடிய சாரங் ஹெலிகாப்டர்கள் இரு திசைகளில் இருந்து ஒரே சமயத்தில் எதிரும், புதிருமாக வந்து மோதுவதுபோல சாகசத்தில் ஈடுபட்டது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த சாகச நிகழ்ச்சியில், விமானப் படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் பங்கேற்றன. தாம்பரம், அரக்கோணம் மட்டுமின்றி, தஞ்சாவூர், கோவை, பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள விமானப் படைதளங்களில் இருந்தும் இந்த விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை 15 லட்சம் பேர் பார்வையிட்டனர். இதன்மூலம், லிம்கா சாதனை புத்தகத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது.
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், முப்படை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இந்திய விமானப் படை தலைமை தளபதி அமர்ப்ரீத் சிங், விமானப் படை பயிற்சிபிரிவு தளபதி ஏர்மார்ஷல் நாகேஷ்கபூர், விமானப் படை தின அணிவகுப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏர் மார்ஷல் கே.பிரேம் குமார், தாம்பரம் விமானப் படை தளபதி ரதீஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம்: சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழப்பு – மெரினா பகுதியில் 15 லட்சம் பேர் திரண்டிருந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்ததும், அனை வரும் ஒரே நேரத்தில் வெளியேறத் தொடங்கினர். இதனால், சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் கடும்கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வெயிலும் அதிகமாக இருந்ததால், 240-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர்.
மெரினாவில் இருந்த தற்காலிக முகாமில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 93 பேர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 10-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.
அதில் திருவொற்றியூர் கார்த்திகேயன் (34), ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட தினேஷ்குமார் (37), கொருக்குப்பேட்டை ஜான் பாபு (56), பெருங்களத்தூர் சீனிவாசன் (52) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மெரினா காமராஜர் சாலை அருகே மயங்கி கிடந்த 55 வயது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.