இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் லெபனானில் இதுவரை 4,000 பேர் உயிரிழப்பு

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை கடந்த 27-ம் தேதி நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இதன் பிறகு இரு தரப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து உள்ளது.

இஸ்ரேல் விமானப் படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் 2,000-க்கும் மேற்பட்ட முகாம்கள் அழிக்கப்பட்டு உள்ளன. 440 ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் முழுவதும் 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 100 பேர் குழந்தைகள். 3,100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தரைமட்டமாகி உள்ளன.

இஸ்ரேல் போர் விமானங்கள், ட்ரோன்களின் தாக்குதலுக்கு அஞ்சி லெபனான் மக்கள் அண்டை நாடான சிரியாவுக்கு தப்பிச் செல்கின்றனர். ஆனால், பெய்ரூட்- டமாஸ்கஸ் சாலையின் முக்கிய பாலங்கள் மற்றும் முக்கிய இடங்களை இஸ்ரேல் அழித்ததால் லெபனான் மக்கள் சிரியாவுக்கு தப்பிச் செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளது.

இஸ்ரேல் எல்லையை ஒட்டிய லெபனான் பகுதிகளில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் சுரங்கப் பாதைகளில் இருந்து இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.

தற்போது லெபனான் எல்லைக்குள் தரைவழியாக நுழைந்துள்ள இஸ்ரேல் வீரர்கள் சுரங்கப் பாதைகளை கண்டறிந்து குண்டுகள் மூலம் தகர்த்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை 250 மீட்டர் நீளம் கொண்ட சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் வெடிகுண்டுகள், ஏவுகணைகளை பதுக்கி வைத்திருந்தனர். அவை பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

காசா மசூதி மீது தாக்குதல்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஜபாலியாவில் ஹமாஸ் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இரவு ஜபாலியா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கிகள் நுழைந்தன. நள்ளிரவு முதல்அதிகாலை வரை ஹமாஸ் தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டனர். அவர்களின் பதுங்கு குழிகள், ஆயுதங்கள் அழிக்கப்பட்டன.

காசாவின் டெய்ர் அல்-பலாஹ் பகுதியில் உள்ள மசூதியில் ஹமாஸ் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. அந்த மசூதி மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுகளை வீசின. இதில் 19 பேர் உயிரிழந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.