ஈரானுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது- பெஞ்சமின் நெதன்யாகு

டெல்அவிவ்,

காசா மீது இஸ்ரேல் போர் தொடங்கிய நாளில் இருந்து லெபனானை சேர்ந்த ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வந்தனர். அவர்களுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வந்தது.

இந்த சூழலில் கடந்த மாதம் 23-ந் தேதி லெபனான் மீது இஸ்ரேல் மிகப்பெரிய அளவிலான வான்வழி தாக்குதலை தொடங்கியது. இதில் அந்த அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இது ஹிஸ்புல்லா அமைப்புக்கு பெரும் பின்னடைவாக பார்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகள் லெபனானுக்குள் ஊடுருவி தரைவழி தாக்குதலையும் தொடங்கியது.

அந்த வகையில் ஹிஸ்புல்லா அமைப்பை அடியோடு ஒழிக்கும் நோக்கில் லெபனானில் வான் மற்றும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. இதில் லெபனானின் பல்வேறு பகுதிகள் உருக்குலைந்து வருகின்றன. இஸ்ரேல் தாக்குதல்களில் லெபனானில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 1-ந் தேதி இரவு இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஈரானுக்கு தக்கபதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.

இந்த நிலையில் காசா மீதான போர் ஓர் ஆண்டை எட்டியதையொட்டி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானின் ஏவுகணை தாக்குதல் குறித்து பேசினார். அப்போது அவர், “ஈரானின் தாக்குதல் ஏற்றுக்கொள்ளமுடியாதது. அதற்க பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு கடமையும் உரிமையும் உள்ளது. நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும்” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.