உடுமலை: உடுமலை நகராட்சி சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பெயர் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட மத்திய பேருந்து நிலைய பகுதியில் புதுப்பிக்கப்பட்ட அசோக ஸ்தூபி, ஜல்லிக்கட்டு காளை சின்னம், நீரூற்று, பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் சிலை திறப்பு விழா கடந்த மாதம் 20-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த விழா தொடர்பான அழைப்பிதழ் மற்றும் கல்வெட்டில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜின் பெயர் இடம் பெறவில்லை.
ஆனால் இதே விழாவில் அதிமுகவை சேர்ந்த உடுமலை சட்டப்பேரவை உறுப்பினர் கே.ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாநகராட்சி 4 வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோரது பெயர்கள் அழைப்பிதழ் மற்றும் கல்வெட்டிலும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தற்போது உடுமலை, தாராபுரம் வட்டார திமுகவினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் சாதிக் பாட்ஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது: “உடுமலையில் நடைபெற்ற அரசு விழாவில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.ராதாகிருஷ்ணன்,திருப்பூர் மாநகராட்சியின் மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோரது பெயர்கள் உள்ள நிலையில், தற்போதைய அமைச்சர் கயல்விழி செல்வராஜின் பெயர் வேண்டும் என்றே புறக்கணிப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. கல்வெட்டு குறித்த விவரம் அமைச்சர் சாமிநாதனுக்கு முன்பே தெரியவில்லையா? அல்லது அவருக்கு தெரிவிக்கப்படவில்லையா?
அமைச்சருக்கு தெரிந்து தான் இந்த தவறு நடந்ததா? என தெரியவில்லை. சமூக நீதிக்காக உருவாக்கப்பட்ட திராவிட மாடல் திமுக ஆட்சியில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் பெயரை திட்டமிட்டு புறக்கணித்திருப்பது ஒட்டு மொத்த மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து திமுக நகர செயலாளர் சி.வேலுச்சாமியிடம் கேட்டபோது, “புரோட்டக்கால் அடிப்படையில் அமைச்சரின் பெயர் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த தவறை யார் செய்திருந்தாலும் மன்னிக்க முடியாதது. விழாவுக்கான ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் தான் செய்திருந்தது. கல்வெட்டு குறித்து நிகழ்ச்சிக்கு முன்பே யாரும் எனது கவனத்துக்கு கொண்டு வரவில்லை. இதுகுறித்து உண்மை நிலையை கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளோம்” என்றார். நகராட்சி தலைவர் மு.மத்தீனிடம் கேட்டபோது, “நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் தான் செய்தது. அதில் அமைச்சர் பெயர் விடுபட்டிருப்பது எங்களுக்கு தெரியாது.
அன்றைய தேதியில் அமைச்சர் வெளியூர் நிகழ்வில் இருந்தார். அதனால் அவரது பெயர் இடம்பெறவில்லை. உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட நிகழ்வு என்பதால் அதிமுக எம் எல் ஏ வின் பெயர் அழைப்பிதழிலும், கல்வெட்டிலும் இடம்பெற்றுள்ளது” என்றார். இதுகுறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் கேட்டபோது, “உடுமலை நகராட்சியில் நடைபெற்ற விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை. அழைப்பிதழ் மற்றும் கல்வெட்டில் இடம் பெயர் பொறிக்கப்படாதது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. கட்சி தலைமையிடம் உரிய விளக்கம் அளித்துள்ளேன்” என்றார்.