புதுடெல்லி: இந்தியாவை ஒட்டியுள்ள எல்லைகட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) பகுதியில் சீனா உள்கட்டமைப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என இந்திய விமானப் படை தளபதி அமர் பிரீத் சிங் நேற்று தெரிவித்தார்.
இந்திய விமானப் படை தினம் (ஏர் ஃபோர்ஸ் டே) வரும் செவ்வாய்க்கிழமை (அக்.8) கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது தளபதி ஏ.பி. சிங் கூறியதாவது:
எல்ஓசி எனப்படும் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சீனா தனது உள்கட்டமைப்பை தீவிரமாக அதிகரித்து வருகிறது.அதற்கு இணையாக, எல்லையில் இந்தியாவும் தனது உள்கட்டமைப்பை வேகமாக மேம்படுத்தி வருகிறது.
உலக நாடுகளிடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் எந்தவொரு எதிர்கால பாதுகாப்பு சவால்களையும் சமாளிக்க உள்நாட்டு ஆயுத அமைப்பு முறையை ஒரு நாடு கொண்டிருப்பது அவசியம். அந்த வகையில், இந்திய விமானப் படையில் 2047-ம் ஆண்டுக்குள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை மட்டுமே பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. அதனை நோக்கி மிக வேகமாக முன்னேறி வருகிறோம்.
எஸ்-400 ஏவுகணை அமைப்பின் மூன்று யூனிட்டுகளை ரஷ்யாஇதுவரை டெலிவரி செய்துள்ளது. மேலும், எஞ்சிய இரண்டு யூனிட்டுகளை அடுத்த ஆண்டில் டெலிவரிசெய்ய ரஷ்யா உறுதி அளித்துள்ளது. இவ்வாறு ஏ.பி. சிங் தெரிவித்தார்.