Iphone 17 : சென்ற மாதம் தான் ஆப்பிள் நிறுவனம் தனது சமீபத்திய ஐபோன் 16 தொடரை அறிமுகப்படுத்தியது, மக்கள் மிகவும் விரும்பும் ஆப்பிள் ஐபோன் வழக்கமாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும். ஆப்பிளின் வரவிருக்கும் ஐபோன் 17 வெற லெவல்! என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். புதிய ஐபோனில் ஒரு புதிய காட்சி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்று செய்திகள் வருகின்றன. இது, ஐபோனின் வடிவமைப்பை மேலும் கவர்ச்சியானதாக மாற்றும்.
ஆப்பிள் iPhone 17-இல் புதிய டிஸ்ப்ளே தொழில்நுட்பம் இருப்பதாக, அதன் உற்பத்தி தொடங்குவதற்கு முன்னரே செய்திகள் வெளிவருகின்றன. தொலைபேசியின் வடிவமைப்பு மிகவும் மெல்லியதாக இருக்கலாம். தைவானிய நிறுவனமான நோவடெக் ஒரு புதிய வகை OLED டிஸ்ப்ளேவை உருவாக்கியுள்ளது, இது அடுத்த ஆண்டு ஐபோன்களில் பயன்படுத்தப்படலாம் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய தொழில்நுட்பத்தின் பெயர் டச் அண்ட் டிஸ்ப்ளே டிரைவர் ஒருங்கிணைப்பு (Touch and Display Driver Integration TDDI (டிடிடிஐ), இது டச் சென்சார் லேயர் மற்றும் டிஸ்ப்ளே டிரைவரை ஒரே யூனிட்டாக இணைக்கிறது. இது ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவை மெலிதாக்குகிறது. அதாவது ஏற்கனவே இருக்கும் போனின் தடிமனை கணிசமாகக் குறைக்கும் என்பதால், ஐபோன்கள் மெல்லிய போன்களாகக் கிடைக்கும்.
ஐபோன் 17 உற்பத்தி எப்போது தொடங்கும்?
DigiTimes இன் படி, நோவாடெக் இந்த TDDI OLED பேனலின் உற்பத்தியை 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து தொடங்கலாம் என்று தெரிகிறது. நோவாடெக் நிறுவனத்தின் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆப்பிள், அதன் முதல் வாடிக்கையாளராக இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஐபோன் 17 தொடரில், நோவடெக் டிடிடிஐ டிஸ்ப்ளேவை ஆப்பிள் பயன்படுத்துமா இல்லையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த தொழில்நுட்பத்தை ஐபாட்கள் அல்லது ஆப்பிள் வாட்ச் போன்ற பிற தயாரிப்புகளில் ஆப்பிள் முதலில் சோதிக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.
தோற்றம் மற்றும் விலை
ஐபோன் 17 ‘ஸ்லிம்’ போன், ஆப்பிள் வரிசையில் இருக்கும் பிளஸ் மாடலுக்கு பதிலாக வரலாம் என்றும் கூறப்படுகிறது. இது 6.6 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம் மற்றும் அதன் விலை Pro Max தொடரை விட அதிகமாக இருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது. இருப்பினும், ஆப்பிள் இந்த விஷயங்கள், ஊகங்கள் என எதையுமே இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும், நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை வேறு வழியில் அல்லது பிற சாதனங்களில் செயல்படுத்தலாம் என்றும் DigiTimes தெரிவித்துள்ளது. இந்த தகவல் கசிவை அடிப்படையாகக் கொண்டது. சரியான தகவல்கள் தெரிய வேண்டுமானால் இன்னும் 11 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.