நிதி ஆலோசகர் லக்ஷ்மி ராமச்சந்திரன் ஓய்வுக் கால பண சேமிப்பின் அவசியம் குறித்து நம்மிடம் பேசினார்.
அவர், “பலரும் பணத்தைச் சேமிப்பது மட்டுமே சேமிப்பு எனத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். உடல் ஆரோக்கியத்தைச் சேமிப்பது போல, உணவைச் சேமிப்பது போல, ஆற்றலைச் சேமிப்பது போல நாம் நம்முடைய எதிர்காலத்தைத் திறம்படக் கையாள நாம் பணத்தையும் சேமிப்பது அவசியம்.
நாம் பிறந்து சராசரியாக 25 வயது வரை நாம் தாய் தந்தையரைச் சார்ந்து வாழும் காலகட்டம். 25 வயது முதல் சுமார் 60 வயது வரை உள்ள 30 முதல் 35 ஆண்டுகள் நாம் நம்முடைய குடும்பத்திற்காக உழைக்கக் கூடிய காலகட்டம். இதற்கு பிறகான எஞ்சியுள்ள காலகட்டம் அதாவது 60 வயதிற்கு பிறகான காலகட்டம் பற்றி யாரும் பெரிதாகச் சிந்திப்பதில்லை” எனக் கூறுகிறார்.
மேலும், “அதற்காக வாங்கும் சம்பளத்தில் பட்ஜெட்டை மூன்று பங்காகப் பிரிக்க வேண்டும். 50 சதவீத தொகையானது உணவு உடை உறைவிடம் கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகவும். 30 சதவீதம் கார், பைக் போன்ற வாழ்வு முறை செலவிற்காகவும். 20 சேமிப்பிற்காகவும் ஒதுக்கப் பட வேண்டும். 20 சதவீதத்தில் 10 சதவீதம் குறுகிய கால சேமிப்பாக இருக்க வேண்டும். அது திடீர் செலவுகளை சமாளிக்க உதவும். மற்றொரு 10 சதவீதம் நீண்ட கால சேமிப்பாக இருக்க வேண்டும். அது மேற்படிப்பு செலவுகள், ஓய்வுக் கால திட்டமிடல் போன்ற செலவுகளைச் சமாளிக்க உதவும்.
குறிப்பாக அகால மரணங்கள் குடும்பத்தின் நிதி நிலைமை குலையாமல் தடுக்க ஆயுள் கால காப்பீடு அவசியம். மேலும் ஏதேனும் ஒரு விபத்து ஏற்பட்டால் மொத்த சேமிப்பும் மருத்துவமனைக்கே செலவாகாமல் தடுக்க மருத்துவ காப்பீடு அவசியம். நம்முடைய சம்பளம் உயர உயர நாம் காப்பீட்டுத் தொகையையும் உயர்த்த வேண்டியது அவசியம்” எனக் கூறினார்.
அத்துடன், “2037 இல் இந்தியாவில் 60 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதத்தைக் கொண்டிருக்கும் எனவே ஓய்வுக் கால சேமிப்பு பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்” எனவும் கூறினார்.