புதுடெல்லி,
உள் துறை மந்திரி அமித் ஷா தலைமையில் நக்சல் பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல்-மந்திரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, சத்தீஸ்கர் முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மத்தியப் பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் நக்சல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளின் மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து அந்த கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, மராட்டியம், ஜார்கண்ட், பீகார், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மாவோயிஸ்டுகளால், பாதிக்கப்பட்டுள்ளன. மோடி அரசின் உத்தியால், நக்சல் பயங்கரவாதம் 72 சதவீதம் குறைந்துள்ளது, 2010ம் ஆண்டை விட 2023ம் ஆண்டில் இறப்பு எண்ணிக்கை 86 சதவீதம் குறைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில், 2026 மார்ச் மாதத்திற்குள் நக்சல் பயங்கரவாத அச்சுறுத்தலை முற்றிலும் வேரறுக்க, மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து 194 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். 801 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 742 பேர் சரணடைந்துள்ளனர்.
ஆரம்பத்தில் 96 நக்சல் பாதித்த மாவட்டங்களில் இருந்து, இப்போது எண்ணிக்கை 42 ஆக குறைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாநிலங்களின் தொலைதூரப் பகுதிகளுக்கு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு செல்வது, சாலை மற்றும் மொபைல் இணைப்புக்கு உத்வேகம் அளிப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
நக்சல் அமைப்புடன் தொடர்பிலுள்ள இளைஞர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு பொதுவாழ்க்கையில் இணைய வேண்டும். வடகிழக்கு மற்றும் ஜம்மு – காஷ்மீரில் 13 ஆயிரம் பேர் ஆயுதங்களைக் கைவிட்டு நக்சல் அமைப்பிலிருந்து வெளியேறியுள்ளனர். நக்சல்களுக்கு எதிரான பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்காக 2004 – 2014 வரை ரூ.1,180 கோடி செலவிடப்பட்டுள்ளது.
2014 – 2024 வரை ரூ.3006 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டுக்கு முன்பு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் எண்ணிக்கை 2ஆக இருந்தது. ஆனால் தற்போது 12ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 6 ஹெலிகாப்டர்கள் எல்லைப் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படுகிறது” என்று அவர் கூறினார்.