காசா: காசா போருக்கு வழிவகுத்த அக்.7, 2023 தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இஸ்ரேலும் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் மாறி மாறி வான்வழித் தாக்குதல் நடத்தினர்.
லெபனான் மீது இன்று புதிதாக வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் இலக்குகளைத் தாக்கியதாகவும், காசாவில் ஹமாஸ்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தது. இதனிடையே, தெற்கு காசாவில் இருந்து ஹமாஸ் இயக்கத்தினர் இன்று இஸ்ரேஸ் மீது ராக்கெட்கள் வீசித் தாக்குதல் தொடுத்தனர். நான்கு ராக்கெட்கள் வீசப்பட்ட நிலையில், அவற்றில் மூன்றை இடைமறித்து தகர்த்துவிட்டதாக இஸ்ரேல் கூறியது. தெற்கு காசாவில் இருந்து டெல் அவிவ் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 2 பேர் காயம்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் நடத்திய ராக்கெட் வீச்சு தாக்குதலில் 60 அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்ததாக வடக்கு இஸ்ரேலின் உள்ளூர் மேயர் ஒருவர் சர்வதேச ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
வடக்கு காசாவில் இருந்த வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவு: இதனிடையே, வடக்கு காசாவில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அவிச்சாய் அத்ராய் கூறுகையில், “காசாவின் பெய்ட் ஹனேவுன், ஜபாலியா மற்றும் பெய்ட் லாஹியாவில் இஸ்ரேல் ராணுவம் பெரும் பலத்துடன் தாக்க உள்ளது. அதனால், அந்தப் பகுதியில் வசித்து வரும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி மத்திய தரைக்கடலின் குறுகிய பகுதியான அல் மவாசியில் உருவாக்கப்பட்டுள்ள முகாமுக்கு சென்றுவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வடக்கு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். அங்குள்ள ஹைஃபா நோக்கி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவித்தனர். தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பல தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்தது, 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டதன் ஓராண்டு நினைவு தினம் இஸ்ரேல் முழுவதும் இன்று கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஆதாரவாளர்கள் ஜெருசலேமில் உள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களின் அன்புக்குரியவர்களை கைவிடும் போக்கை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தி அவர்களை உடனடியாக திரும்ப மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினர்.