“சமாளிக்க முடியாத கூட்டங்களை இனி தவிர்க்க வேண்டும்” – விமான சாகச நிகழ்ச்சி குறித்து கனிமொழி வருத்தம்

சென்னை: சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.

மெரினாவில் இருந்த தற்காலிக முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 93 பேர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 10-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.