சென்னை: சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்கு போதிய வசதிகள் செய்யாததால்தான் 5 பேர் உயிரிழந்தனர் என அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: “பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளையும், போதுமான போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல், திமுக அரசு, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே உயிரிழப்புகளுக்கு ஒரே காரணம். முதல்வர் ஸ்டாலின், தனது சுய விளம்பரங்களுக்காக மேற்கொள்ளும் ஏற்பாடுகளைக் கூட, பல லட்சம் பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவில்லை என்பது அவரது நிர்வாகத்தின் முழுமையான தோல்வியைக் காட்டுகிறது,” என்று கூறியுள்ளார்.
முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் : “குளிரூட்டும் வசதியுடன் முன் வரிசையில் அமர்ந்த அதிகார வர்க்கம். நடிகர் விஜய் கட்சியின் மாநாடு, விநாயர் சதுர்த்தி ஊர்வலம், பாஜக மாநாடு, ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு பல கேள்விகள் கேட்கும் தமிழக அரசு, நம் இந்திய நாட்டின் விமானப்படை நடத்தும் நிகழ்ச்சிக்கு உரிய முன்னேற்பாடுகளை செய்யாதது ஏன்?,” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் : “பொதுமக்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டதற்கு முழு முதற் காரணம் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளாத, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத திமுக அரசுதான். அரசு நிகழ்ச்சியைக் கூட முறையாக நடத்த இயலாத அளவுக்கு திமுக அரசு விளங்குகிறது.
பாமக தலைவர் அன்புமணி: லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளைக் கூட செய்ய முடியாத தமிழக அரசு, பாதுகாப்புத் துறையினர் கேட்ட ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட்டதாக பழியை அவர்கள் மீது போட்டு தப்பித்துக் கொள்ள முயல்கிறது,” என தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் : “இந்த உயிரிழப்புகள் கூட்ட நெரிசலால் ஏற்படவில்லை. வெயிலின் தீவிரத்தால் உண்டான நீர்ச்சத்து குறைவு காரணமாகவே ஏற்பட்டிருக்கிறது. வெயிலின் கொடுமையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது குறித்து இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் குறைபாடுகள் ஏதும் இருந்ததா என்பதை விசாரித்து அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உயர்மட்ட விசாரணைக்கு ஆணையிட வேண்டும்,” என்றார்.
விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா: “லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்துக்குகு ஏற்ற வகையில் தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முறையான முதல் உதவி சிகிச்சை மையங்களையும் ஏற்பாடு செய்யவில்லை. இவ்வளவு மக்கள் திரளும் போது மக்களை ஒழுங்குப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதில் போதிய கவனம் செலுத்தாமல் போனதாலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அரசின் கவனக்குறைவால் வான்படை சாக நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல், வேதனை நிகழ்வாக மாறிவிட்டது,” என கூறியுள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் : “தமிழக அரசு லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள் என்று தெரியும் பட்சத்தில் முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடு நடவடிக்கைகள் அதிகம் தேவை என்பதற்கேற்ப பாதுகாப்பை மேலும் முறைப்படுத்தியிருக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: “தமிழக அரசு, மருத்துவமனையில் 4 ஆயிரம் படுக்கை ஏற்பாடு செய்யப்பட்டு, மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்ததாக கூறியுள்ளது. இருப்பினும், வெப்பவாத அபாயம் பற்றிய எச்சரிக்கை முன்பே விடப்பட்டதா? மக்கள் கூடி பார்வையிடும் இடங்களில் குடிநீர் வசதிகள் உரிய முறையில் செய்யப்பட்டதா என்ற கேள்விகள் பொதுவாக எழுந்துள்ளன. எனவே, இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்,” என்றார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: “இந்த நிகழ்வு அரசினுடைய நிர்வாக சீர்கேட்டிற்கு உதாரணமாக அமைந்துவிட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக அரசு எந்தவித பாதுகாப்பும் செய்யாமல் தவறவிட்டது கண்டனத்துக்குரியது. மக்கள் கடும் அவதிக்கு உள்ளாக்கப்பட்டதற்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் : “தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்திற்கும், பவளவிழா மாநாட்டை நடத்துவதற்கும் அதீத கவனம் செலுத்திய திமுக அரசு, லட்சக்கணக்கானோர் கூடிய மெரினா கடற்கரையில் அடிப்படை வசதிகளையும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யத் தவறியது மக்கள் மீதான அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் நடிகர் விஜய்: “விமான சாகச நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் தமிழக அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை. இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்பட செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்” எனத் கூறியுள்ளார்..
பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் : “கார்ப்பரேட் முதலாளிகளின் ஃபார்முலா 4 கார் ரேஸ் நிகழ்ச்சிக்கு காட்டிய அக்கறை, லட்சக்கணக்கான மக்கள் விரும்பிய விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு காட்டாதது ஏன்? பொதுமக்கள் கடும் துன்பத்திற்கு உள்ளாகும் வகையில் நிகழ்ச்சிகளை சரியான முறையில் ஒருங்கிணைத்து செயல்படுத்த தவறிய தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.
இதேபோல், வி.கே.சசிகலா, பாஜக நிர்வாகி நடிகர் சரத்குமார், கொங்குநாடு மக்கள் தேதிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோரும் தமிழக அரசு மீது குற்றம் சாட்டி உள்ளனர்.