பண மோசடிகள் இவ்வுலகத்துக்குப் புதிதல்ல. ஆனால், அதிலிருந்து மக்கள் பாடம் கற்றுக்கொள்ளாமலே இருப்பதுதான் வேதனை. சமீபத்தில்கூட, ‘விழுப்புரம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி’, ‘சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.54 லட்சம் மோசடி’ என்ற செய்திகள் படபடத்ததைப் பார்த்திருக்க முடியும். இந்த வரிசையில், ‘பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜவுளித் தொழிலதிபர், ‘பத்மபூஷன்’ எஸ்.பி.ஓஸ்வாலிடம், இணையம் மூலம் சி.பி.ஐ, நீதிமன்றம் என்றெல்லாம் போலி நாடகமாடி, 7 கோடி ரூபாய் மோசடி’ செய்யப்பட்டிருப்பது நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏழைப்பட்டவர்களும் ஏமாற்றப்படுகிறார்கள், கோடீஸ்வரர்களும் ஏமாற்றப் படுகிறார்கள். ரிசர்வ் வங்கியின் 2024-ம் ஆண்டின் அறிக்கை, ‘இந்த நிதியாண்டில் நடந்த வங்கி மோசடிகளில் 80%, அதாவது 29,082 குற்றங்கள் இணைய வழியில் நிகழ்ந்துள்ளன’ என்கிறது. இது, முந்தைய ஆண்டைவிட 334% அதிகம். இதேபோல, நகைச்சீட்டு முதல் ரியல் எஸ்டேட் வரை ஒவ்வொரு நொடியிலும் மோசடிகள் நடந்து கொண்டேதான் உள்ளன. `10 ரூபாய் போட்டால்… 100 ரூபாய் எடுக்கலாம்’ என்பது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, பேராசையால் பண இழப்புக்கு உள்ளாகிறார்கள் சிலர். ‘பேங்க்ல இருந்து பேசுறோம், பாஸ்வேர்டு சொல்லுங்க’ என்றால், அனைத்தையும் அறியாமையால் ஒப்புவிப்பவர்களும் பணத்தை இழக் கிறார்கள். ‘உங்க பேருக்கு சட்ட விரோத பார்சல் வந்திருக்கு’ என்று ஸ்கிரிப்ட் எழுதி ஏமாற்றுபவர்களிடம் பயத்தால் சிக்கிக்கொள்கிறார்கள் சிலர்.
மோசடிக்காரர்கள் நம்மை ஏமாற்றுவதற்கான வாய்ப்பை, நாம்தான் கொடுக்கிறோம். அந்த வகையில் இதில் நமக்கும் பங்கு இருக்கிறது. இதில், இன்னொரு வகையையும் சேர்க்கத்தான் வேண்டும். `என் நட்பு/சொந்தம்/ஆபீஸ்லயே நீங்கதான் நல்லவங்க, ரொம்ப இக்கட்டான சூழ்நிலை, ஒரே மாசத்துல திருப்பிக் கொடுத்துடறேன்’ என்று பொய் யாகக் கேட்பவர்களிடம், முககரிசனம் பார்த்து பணத்தைக் கொடுப்பவர்கள் பலர்.
இக்கட்டான சூழலில் சக மனிதனுக்கு உதவுவது நம் கடமை. ஆனால், அது நேர்மையாக, பொறுப்புடன் இருப்பவர்களுக்குத்தான். ஆடம்பரம் முதல் ஆன்லைன் ரம்மி வரை தங்களின் பொறுப்பற்றதனத்தால் விளைந்த பண நெருக்கடிக்கு நம்மை பயன்படுத்திக் கொள்பவர்களிடம் ஏமாறுவது மாபெரும் தவறு. கொடுத்த பணத்தை திரும்பப் பெறும் முயற்சியில் மன உளைச்சலுக்கு ஆளாவதுதான் பெரும்பாலும் நடக்கும். ஒருவருக்கு நாம் உதவுவது… தனிப்பட்ட முடிவு. ஆனால், ஒருவருக்கு உதவச் சொல்லி, வேறு ஒருவரிடம் நாம் பரிந்துரைப்பது, பொறுப்பேற்று பணம் பெற்றுக்கொடுப்பதெல்லாம் தவிர்க்க வேண்டியவையே!
நம் பணம் என்பது நம் உழைப்பு தோழிகளே. இன்றைய காலச்சூழலில் உறவு களுக்கான நேரம், பொழுதுபோக்கு, ஆரோக்கியம் என்று இங்கு பலரும் பலவற்றை யும் இழந்துதான் பணத்தையே சம்பாதிக்கிறோம், சேர்க்கிறோம். அப்படியிருக்க, அதை பத்திரப்படுத்துவது, மிகமிக முக்கியம்தானே?
விழிப்பு உணர்வுதான் நம் பணத்துக்கான முதல் பாதுகாப்பு தோழிகளே. கைமாற்று, கடன், சீட்டு, போன் கால்கள், லிங்க்குகள் என யார், எப்படி நம் பணத்தைக் குறிவைத்து வந்தாலும்… இருப்போம் விழிப்புடன்!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்