பறிபோகும் ருதுராஜ் கைக்வாட் வாய்ப்பு? போட்டியாக வந்த புதிய வீரர்!

சமீபத்திய போட்டிகளில் பெங்கால் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிமன்யு ஈஸ்வரன் சிறப்பாக விளையாடி வருகிறார். இராணி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்காக அபாரமான 191 ரன்கள் அடித்து இருந்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இவர் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து என அனைத்து பவுலர்களையும் துவம்சம் செய்தார். முதல் இன்னிங்சில் மும்பை அடித்த இமாலய இலக்கை கிட்டத்தட்ட ரெஸ்ட் ஆப் இந்தியா அடிப்பதற்கு உறுதுணையாக இருந்தார் அபிமன்யு ஈஸ்வரன். கடைசியாக விளையாடிய ஐந்து முதல்தர ஆட்டங்களில் நான்கு முறை 100 ரன்களுக்கும் மேல் அடித்து அசத்தியுள்ளார். பிப்ரவரி மாதம் பீகாருக்கு எதிராக பெங்கால் அணிக்காக ஆட்டமிழக்காமல் 200 ரன்களை எடுத்தார்.

கடந்த மாதம் துலீப் டிராபியில் இந்தியா பி அணிக்காக 157* மற்றும் 116 ரன்கள் எடுத்தார். சர்பராஸ் கானைப் போலவே தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் ரன்களை குவித்து வருகிறார் ஈஸ்வரன். இந்நிலையில் ஈஸ்வரனும் இந்திய அணியில் ஒரு பேக்-அப் தொடக்க ஆட்டக்காரராக இடம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெற உள்ளது. இது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இரண்டு மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த தொடரின் பேக்கப் ஒப்பனராக ருதுராஜ் கைகுவாட் இடம் பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அபிமன்யு ஈஸ்வரன் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் அதற்கு முன் நடைபெறும் நியூசிலாந்து தொடரில் ஈஸ்வரன் பெயர் இடம் பெறுமா என்பதை பார்க்க வேண்டும். மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா நியூஸிலாந்துக்கு எதிராக விளையாடுகிறது. தற்போது நடைபெற்று கொண்டு இருக்கும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் ருதுராஜ் இடம் பெறவில்லை. ஜூலை மாதம் நடைபெற்ற இலங்கை தொடரிலும் அவரது பெயர் இடம் பெறவில்லை. ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் துலீப் டிராபியில் பெரிய ஸ்கோர் அடிக்க தவறவிட்டார். அதே சமயம் இரானி கோப்பையில் இன்னிங்ஸில் தோல்வியடைந்தார். மறுபுறம் ஈஸ்வரன் 98 முதல்தர போட்டிகளில், 26 சதங்கள் மற்றும் 29 அரைசதங்களுடன் 49.38 சராசரியில் 7506 ரன்கள் குவித்துள்ளார். 

தற்போது இந்திய தேசிய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக உள்ளதால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. “எனது வேலை எனது அணி வெற்றிபெற ரன்களை குவிப்பதாகும். அணியில் தேர்வு என் கையில் இல்லை, அது தேர்வாளர்களின் வேலை, வாய்ப்பு கிடைத்தால் என்னால் முடிந்ததைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன். நான் எனது கிரிக்கெட்டை ரசிக்கிறேன், எப்போதும் எனது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறேன். இந்தியாவுக்காக விளையாடுவது அனைவரின் கனவாகும், அந்த இலக்கை அடைவதற்காக எனது பணியை நேர்மையாக செய்து வருகிறேன்” என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.