புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஹோமியோபதி மருத்துவமனையில் சிறுநீரகக் கல் கரைக்கும் சிகிச்சை விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. 10 மி.மீ அளவுக்கான கற்களையும் கரைக்கும் சிகிச்சை இங்கே தரப்படவுள்ளது.
புதுச்சேரியில் ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை ஆராய்ச்சி பிரிவு பொறுப்பு அதிகாரி மருத்துவர் பிரபாத் திவாரி, புதுவை அரசின் ஆயுஷ் இயக்குநர் ஸ்ரீதரன் மற்றும் ஹோமியோபதி மருத்துவர் மாதப்பன் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: “இந்திய மருத்துவம் (ஆயுஷ்) மற்றும் ஹோமியோபதி மருத்துவக் குழுவும் இணைந்து ஒரு மூலிகை, ஒரு தரநிலை எனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு செயல்படுகின்றன. அதன்படி இரு முறை சிகிச்சையிலும் மருந்துகள் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரியில் தற்போது 55 சதவீத பெண்கள் வைட்டமின் டி குறைபாட்டால் எலும்பு தேய்மானப் பாதிப்புக்கு உள்ளாகி வருவது தெரியவந்துள்ளது.
பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வரும் எலும்பு தேய்மான பாதிப்பு தற்போது 30 வயது முதல் 40 வயதுடைய பெண்களுக்கும் ஏற்பட்டுள்ளது. உணவுப் பழக்கவழக்க மாற்றத்தால் எலும்பு தேய்மான பிரச்சினை ஏற்படுகிறது. அதற்கு வாரத்தில் ஓர் நாள் பிரண்டை துவையல் சாப்பிடுவது நல்லது. பெண்களுக்கான எலும்பு தேய்மான பிரச்சினை குறித்து புதுச்சேரியில் சத்யாநகர், வெண்ணிலா நகர், மூலக்குளம், முத்திரவாய்க்கால் ஆகிய இடங்களில் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது. அதேபோல ஆயுஷ் சிகிச்சை திட்டத்தில் முதியவர்களுக்காக வயோமித்ரா திட்டத்தில் மூட்டுவலி, கை, கால் வலி பிரச்சினைக்கான பரிசோதனைகள் முகாம் 22 இடங்களில் நடைபெறவுள்ளன.
புதுச்சேரி பூமியான்பேட் பகுதியில் உள்ள ஹோமியோபதி சிகிச்சை மையத்தில் சிறுநீரகத்தில் உள்ள கல் கரைப்பு சிகிச்சை அளிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. அதற்கான ஸ்கேன், எக்ஸ்ரே ஆகிய சிகிச்சை இலவசமாக வழங்கப்படும். சிறுநீரகத்தில் 10 மி.மீ. வரையிலான கற்களையும் கரைக்கும் சிகிச்சை இங்கு அளிக்கப்படும். தற்போது புதுச்சேரியில் 1000-க்கு 10 பேருக்கு சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஆகவே, ஹோமியோபதி சிகிச்சையில் சிறுநீரகக் கல் கரைப்பு சிகிச்சை அளிப்பது முக்கியத்துவம் பெறுகிறது” என அவர்கள் தெரிவித்தனர்.