மாநகராட்சி நிலைக்குழு தேர்தல் தொடர்பாக டெல்லி ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சி உள்ளாட்சி நிலைக் குழு தேர்தல் தொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லி மாநகராட்சியில் அதிகாரம் படைத்த அமைப்பாக உள்ளாட்சி நிலைக்குழு உள்ளது. இந்த குழுவில் 18 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் இடம்பெற்றிருந்த பாஜகவை சேர்ந்த கமல்ஜித் ஷெராவத் மக்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்த காலியிடத்துக்கு பாஜக கவுன்சிலர் சுந்தர் சிங் தன்வாரும், ஆம் ஆத்மி கவுன்சிலர் நிர்மலா குமாரியும் போட்டியிட்டனர்.

டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மிக்கு 125 கவுன்சிலர்களும் காங்கிரஸுக்கு 9 கவுன்சிலர்களும் உள்ளனர். பாஜகவுக்கு 115 கவுன்சிலர்கள் உள்ளனர். உள்ளாட்சி நிலைக்குழு உறுப்பினருக்கான தேர்தல் அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் என்று மேயர் ஷெல்லி ஓபராய் அறிவித்திருந்தார்.

ஆனால் துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவின் உத்தரவின்படி கடந்த 27-ம் தேதி இரவில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலை ஆம் ஆத்மியும் காங்கிரஸும் புறக்கணித்தன. பாஜக கவுன்சிலர் சுந்தர் சிங் தன்வாருக்கு 115 வாக்குகள் கிடைத்தன. அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மேயர் ஷெல்லி ஓபராய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் நரசிம்ஹா, மகாதேவன் அமர்வுமுன்பு நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

டெல்லி துணை நிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரங்கள் உள்ளன. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவைகளில் துணைநிலை ஆளுநர் தனதுசிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது. முன்கூட்டியே தேர்தலை நடத்த உத்தரவிட்டது ஏன்?துணைநிலை ஆளுநர் இதுபோல தொடர்ந்து தலையீடு செய்தால் ஜனநாயகத்தின் நிலை என்னவாகும்? இந்த விவகாரம் குறித்து துணைநிலை ஆளுநர், தேர்தலை நடத்திய அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். டெல்லிமாநகராட்சி உள்ளாட்சி நிலைக்குழு தலைவர் தேர்தலை இப்போதைக்கு நடத்தக்கூடாது.வழக்கின்அடுத்த விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.