கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் மரணத்துக்கு நீதி கேட்டும், பணியிட பாதுகாப்பை வலியுறுத்தியும், இளநிலை மருத்துவர்கள் தங்களின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலைக்கு எதிர்ப்புதெரிவித்து இளநிலை மருத்துவர்கள் நடத்திய 42 நாள் போராட்டம் கடந்த மாதம் 21-ம் தேதி முடிவடைந்தது. அப்போது மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என மேற்கு வங்க அரசு உறுதி அளித்தது. ஆனால் மாநில அரசு அவற்றை நிறைவேற்றாததால் இளநிலை மருத்துவர்கள் 6 பேர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கடந்த சனிக்கிழமை தொடங்கினர். இவர்களுடன் சேர்ந்து உண்ணா விரதபோராட்டம் மேற்கொள்ள மூத்த மருத்துவர்களும் திட்டமிட்டுள்ளனர்.
9 கோரிக்கைகள்: இந்த போராட்டத்துக்கு பிரபலங்கள் சிலரும், பொதுமக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி வேண்டும் என்பதுதான் போராட்டம் நடத்தும் மருத்துவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதோடு 9 கோரிக்கைகளையும் அவர்கள் மாநில அரசின் முன் வைத்துள்ளனர்.
மாநில சுகாதார துறை செயலாளர் என்.எஸ். நிகாமை உடனடியாக அகற்ற வேண்டும், சுகாதாரத்துறையில் ஊழலை ஒழிக்க வேண்டும், மருத்துவமனைகளில் படுக்கைகள் காலி நிலவரத்தை கண்காணிக்கும் வசதியை அமல்படுத்துதல், சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், போலீஸ் பாதுகாப்பை அதிகரித்தல், பெண்போலீஸாரை நிரந்தரமாக பணியமர்த்துவது, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர சுகாதார பணியாளர்களின் காலியிடங்களை நிரப்புதல் உட்பட பல கோரிக்கைகளை போரட்டம் நடத்தும் மருத்துவர்கள் முன் வைத்துள்ளனர்.