புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
காதி பொருட்களுக்கும் உள்ளூர் தயாரிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தொடர்ந்துநாட்டு மக்களிடம் கேட்டு வருகிறார். அதன்பிறகு நாட்டில் பெரும் புரட்சியே ஏற்பட்டு வருகிறது. கடந்த 2-ம் தேதி காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
அன்றைய தினம் டெல்லி கன்னாட்பிளேஸ் பகுதியில் ரீகல் கட்டிடத்தில் இயங்கும் காதி நிலையத்தில் மட்டும் ரூ.2 கோடிக்கு மேல் காதி பொருட்கள் விற்கப்பட்டுள்ளன. இது கடந்த காலங்களில் நடைபெற்ற விற்பனை அளவை விட மிக அதிகம்.
இதன் மூலம் காதி பொருட்களைத் தயாரிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாகவும் வருவாய் அதிகரிக்கவும் உதவியாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் அமித் ஷா கூறினார்.