டேராடூன்: லவ் ஜிகாத்தில் ஈடுபட்டால் சிறுபான்மையினரின் கடைகளுக்கு தீ வைப்போம் என மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலம் பவுரி கார்வால் மாவட்டத்தின் ஸ்ரீநகரில், பாஜக துணைத் தலைவர் லக்பத் பண்டாரி கடந்த சில தினங்களுக்கு முன்பு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பேரணி நடத்தினார்.
அப்போது அவர் பேசும்போது கூறியதாவது: சமீபத்தில் 6-ம் வகுப்பு மாணவிக்கு முஸ்லிம் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் லவ் ஜிகாத் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் இந்து பெயரில் சமூக வலைதளம் மூலம் இந்து பெண்களுக்கு வலை வீசி உள்ளார். எனவே இது போன்றவலையில் நம் மகள்கள் சிக்குவதைத் தடுக்க பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கவே இந்த பேணி நடபெற்றது.
இந்து மதத்தைச் சேர்ந்த சிறுமிகளை குறிவைத்து காதல் வலையில் வீழ்த்த முயற்சிப்பவர்களின் (லவ் ஜிகாத்) கண்களை தோண்டி விடுவோம். சிறுபான்மையினருக்கு சொந்தமான கடைகளை தீ வைத்து எரித்து விடுவோம். லவ் ஜிகாத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. இவ்வாறு லக்பத் பண்டாரி தெரிவித்தார்.
வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பாரதிய நியாய் சன்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் லக்பத் பண்டாரி மீது போலீஸார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த தகவலை பவுரி கார்வால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோகேஷ்வர் சிங் தெரிவித்தார்.