கோவை: மழை பாதிப்பு குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும் வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை ‘டி.என்.அலார்ட்’ (TN Alert App) செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் 1077, 0422-2301114 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் கொண்ட 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மையம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் வட்ட வாரியாக துணை ஆட்சியர் அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வட்ட வாரியாக பல்வேறு துறை அலுவலர்கள் அடங்கிய மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏதுவாக 66 நிவாரண முகாம்கள் கண்டறியப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளன.
மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால்கள் வசதி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மழைநீர் தேங்குவதற்கு ஏதுவாக குளம், குட்டைகள் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித் துறையினர் மூலம் தூர்வார அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக் கட்டிடங்கள் பழுது பார்க்கப்பட்டு மழைநீர் தேங்காமல் இருக்க பொதுப்பணித்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக மழை மற்றும் வெள்ளத்தினை முன்கூட்டியே எளிதாக தெரிந்து கொண்டு முன்னேற்பாடுகளை செய்யும் வகையில் தமிழக அரசு டி.என்.அலார்ட் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. மக்கள் எளிய முறையில் பயன்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலின் மூலம், பொதுமக்கள் தங்களது இருப்பிட வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை தமிழிலேயே அறிந்து கொள்ளும் வகையிலும், தினசரி மழையளவு. நீர்தேக்கங்களின் நீர் இருப்பு விவரம், பேரிடர் காலங்களில் பாதிப்படையக்கூடிய பகுதிகளின் விவரம். பேரிடர் காலங்களின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை போன்ற அறிவுரைகளும். மற்றும் தங்களது பகுதியில் மழை மற்றும் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவரங்களை இந்த செயலியின் மூலம் எளிய வகையில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.