சென்னை: உலக விண்வெளி வாரத்தையொட்டி, இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விண்வெளி ஆய்வில் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் அவர்கள் தலைமையிலான செயற்கைக்கோள் திட்டத்தைத் துவங்க ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ நிறுவனத்துடன் (Space Kidz India), இலங்கையின் SLITT Northern Uni புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இன்ஸ்பேஸ் அகமதாபாத், இயக்குனர் டாக்டர் பிரபுல்ல குமார் ஜெயின்,SLITT Northern Uni தலைவர் இண்டி பத்மநாதன், ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா நிறுவனர் மற்றும் தலைமைசெயல் அதிகாரி ஸ்ரீமதி கேசன், உலக விண்வெளி வார சங்கத்தின் நிர்வாக இயக்குனர் அல்மா ஓக்பலேப் மற்றும் கல்வி உளவியலாளர் சரண்யா ஜெய்குமார் ஆகியோர் முன்னிலையில் சென்னையில் கையெழுத்தானது.
இது அப்பகுதியின் விண்வெளி தொழில்நுட்பத்தின் முதல் பயணத்தை குறிக்கிறது. இந்த லட்சியத் திட்டத்தின் மூலம், யாழ்ப்பாணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களையும், இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களையும் கூட்டாக ஒன்றிணைத்து, செயற்கைக்கோளை வடிவமைத்து, உருவாக்கி, ஏவ SLITT Northern Uni திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் விண்வெளி வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்கும் அதிநவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை நிரூபிக்கும் வகையில் அதிநவீன கருவிகளை சுமந்து சென்று விண்ணில் நிலைநிறுத்த உள்ளது.
SLITT Northern Uni மேற்கொண்டுள்ள இந்த கூட்டு முயற்சியானது இருநாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் கண்டுபிடிப்பு தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தும் அதே வேளையில் அறிவியல் ஆராய்ச்சிக்கான விலைமதிப்பற்ற தரவுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் மாணவர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை நேரடியாக வெளிப்படுத்துவதுடன், உலகளாவிய சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை வழங்குவதற்கான ஆற்றலைக் கொண்ட அற்புதமான ஆராய்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.
இந்த முன்முயற்சியானது, செயற்கைக்கோள் மேம்பாடு, தரவு பகுப்பாய்வு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் ஆகியயவற்றில் மாணவர்களுக்கு தேவையான திறன்களைக் கொண்டு, அறிவியல், தொழில்நுட்பம்,பொறியியல் மற்றும் கணித துறைகளில் எதிர்கால வாழ்க்கைக்கு அவர்களைத் தயார்படுத்தும். இதன் மூலம், இரு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் விண்வெளி ஆராய்ச்சியை முன்னேற்றுவதிலும், சமூகத்துக்குப் பயனளிக்கும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்வதிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள்.
இந்த நிகழ்ச்சியில் SLITT Northern Uni தலைவர் இண்டி பத்மநாதன் பேசியதாவது: “விஞ்ஞான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர கண்டுபிடிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதில் இந்த முயற்சி இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் ஒரு மாபெரும் உத்வேகம் அளிக்கும். இரு நாடுகளின் வருங்கால தலைமுறையான நமது மாணவர்கள், செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் நுணுக்கங்கள் குறித்து நன்கு அறிந்து கொள்வார்கள்.
பல்வேறு பின்னணி, கலாச்சாரம் மற்றும் கல்விமுறைகளைச் சேர்ந்த மாணவர்களிடையே எல்லை தாண்டிய இந்த ஒத்துழைப்பு அவர்களின் திறமையை வளர்க்கும் என்பது குறித்து எண்ணிப் பார்க்கையில் அது என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. அவர்கள் அறிவியல் மற்றும் பொறியியலில் மேம்பட்ட திறன்களை வளர்ப்பது மட்டுமல்லாமல், குழுப்பணி மற்றும் தமக்கான இலக்குகள் குறித்தும் கற்றுக்கொள்வார்கள். இந்த திட்டத்தின் மூலம், நாங்கள் ஒரு செயற்கைக்கோளை உருவாக்கவில்லை, புதிய கண்டுபிடிப்புகளுக்கான எல்லைகள் இல்லாத எதிர்காலத்தை உருவாக்குகிறோம்,” என்று தெரிவித்தார்.
ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரிஸ்ரீமதி கேசன் பேசுகையில், “இந்தத் திட்டம் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆய்வு ஆகியவற்றுடன் மக்களை ஒன்றிணைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும். இரு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை இந்த திட்டத்தில் ஈடுபடுத்துவதன் மூலம், உலகளாவிய சவால்களில் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள எதிர்கால தலைமுறைக்கான விதைகளை நாம் தற்போது விதைக்கிறோம்.
இந்த இளம் மனங்கள் விஞ்ஞான முன்னேற்றத்தின் ஜோதியாக மாறுவதோடு, இந்த செயற்கைக்கோளை உருவாக்க விண்ணில் செலுத்துவதில் அவர்களின் பங்கேற்பும் துவங்குகிறது. விண்வெளி தொழில்நுட்பம் நம்பமுடியாத சக்திவாய்ந்த ஒரு துறையாகும். மேலும் இந்த திட்டத்தின் மூலம், மாணவர்களை புவியியல் எல்லைகளுக்கு அப்பால் பார்க்கவும், விண்வெளி அறிவியலில் உண்மையான கண்டுபிடிப்பாளர்களாகவும் தலைவர்களாகவும் மாற்றுவதையே நாங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்று தெரிவித்தார்.
Northern Uni பற்றி: இந்த திட்டம் இரண்டு முக்கிய கட்டங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டம்,விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கும் வகையில் இலங்கையைச் சேர்ந்த 50 பள்ளி மாணவர்கள், இந்தியாவைச் சேர்ந்த 10 பள்ளி மாணவர்கள் மற்றும் 50 கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதல் கட்டத்தில், இதல் பங்கேற்பவர்களுக்கு செயற்கைக்கோள் மேம்பாடு மற்றும் விண்வெளிப் பயணங்கள் பற்றிய அடிப்படை புரிதல் குறித்து தெளிவாக விளக்கப்படும். இது கோட்பாட்டு அறிவை நடைமுறை நுண்ணறிவுகளுடன் இணைக்கும் வளமான கல்வி அனுபவத்தை வழங்கும்.
இரண்டாவது கட்டமாக, இலங்கையைச் சேர்ந்த 30 கல்லூரி மாணவர்கள் நேரடியாக செயற்கைக்கோளை உருவாக்குதல், ஒருங்கிணைத்தல் மற்றும் அதை ஏவுதல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் தயார்படுத்தப்படுவார்கள். இந்த கூட்டு முயற்சியின் மூலம் இந்திய வல்லுநர்கள் மற்றும் அவர்களது குழுவுடன் இணைந்து பணியாற்றவும், செயற்கைக்கோள் கட்டுமானத்தில் அனுபவத்தைப் பெறவும் அவர்களுக்கு உதவும். மேலும், இலங்கையில் இருந்து 15 கல்லூரி மாணவர்களும் 50 பள்ளி மாணவர்களும் இந்த செயற்கைக்கோள் ஏவுவதைப் பார்க்க இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இது ஒரு சக்திவாய்ந்த கற்றல் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதோடு எதிர்கால சந்ததியினரை விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அவர்களை ஊக்குவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.