டெல் அவிவ்: பாலஸ்தீன பயங்கரவாதிகள் குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்.7-ம் தேதி நடத்திய எதிர்பாராத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவினைக் கடைபிடிக்க ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
டெல் அவிவ் முதல் லண்டன், பாரிஸ் மற்றும் பெர்லின் நகரங்களில் ஹமாஸ் தாக்குதலின் முதலாமாண்டு நினைவைக் குறிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்திய ஊர்வலங்கள், நினைவேந்தல் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் திங்கள்கிழமை நடத்தப்பட்டன. நோவா இசை விழாவில் கடந்த ஆண்டு ஹமாஸ் நடத்திய தாக்குதலை குறிக்கும் விதமாக டெல் அவிவ் நகரத்தில் மக்கள் ஒன்று கூடி மெழுகுவர்த்தி ஏந்தியும், பிரார்த்தனை செய்தும் கூடியிருந்தனர். அப்போது இசைநிகழ்ச்சி நடத்தியும் அஞ்சலி செலுத்தினர். அந்த அரங்கின் வாயிலில் பாதிக்கப்பட்டவர்களின் படங்கள் பெரிய திரையில் காட்டப்பட்டன. இதனிடையே தற்காலிக நினைவிடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.