BB Tamil 8 Day 1: GRAND OPENING ‘விஜயகரமாக’ துவங்கிய முதல் நாள்!

விகடன்.காம் உறவுகளுக்கும் அன்பர்களுக்கும் இந்த  சுரேஷ் கண்ணனின் அன்பான வணக்கம். நலம்தானே? இன்னுமொரு பிக் பாஸ் சீசனில், விகடன் தளம் வழியாக  உங்களை  மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. ‘கமல் போய் விஜய்சேதுபதியே வந்துட்டாரு.. இவர் இன்னமும் போகலையா?’ என்று முணுமுணுப்பவர்களுக்கும் சிறப்பு வணக்கம்.

இந்த எட்டாவது சீசன் சற்று வித்தியாசமானது. போட்டியாளர்கள் யார், யார் என்பதை அறிவதற்கான ஆவலை விடவும் புதிய ஹோஸ்ட் ஆன விஜய்சேதுபதி எப்படி இந்த நிகழ்ச்சியை கையாளப் போகிறார் என்பதைக் காணவே பலரும் ஆவலாக இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் சும்மா சொல்லக்கூடாது. தன்னுடைய தனித்துவமான பாணியில் செயல்பட்டு நின்று களமாடி அசத்தி விட்டார் விசே. தனக்கான ‘அசல்’ மீட்டர் என்னவோ அந்த பவுண்டரியில் நின்று அவர் அடித்து ஆடிய சிக்ஸர்கள் நன்று. 

மிகப் பெரிய அனுபவசாலியான கமலுடன் புதிய ஹோஸ்ட்டை ஒப்பிட்டுப் பார்ப்பது தவிர்க்க முடியாதது. கமலின் விவரிப்பில் நிறைய நையாண்டியான குத்தல்கள் இருக்கும். விசேவின் பேச்சில் அது மிஸ்ஸிங். ஆனால் இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதும் ஒருவகையில் அநாவசியமானது.  ஒவ்வொருக்குமே ஒரு தனி ஸ்டைல் இருக்கும்.  அந்த ஸ்டைலில் அவர்களைப் பார்ப்பதுதான் அழகு.  

எந்தவொரு துறையிலும் பிரகாசிக்க விரும்புவர்கள், ஆரம்பக்கட்டத்தில் தனக்குப் பிடித்தமான முன்னோடிகளின் பாணியிலிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். ஏன் மெலிதாக நகல் கூட எடுக்கலாம். ஆனால் ஒரு கட்டத்தில் தனக்கான பாணியை நாமே அடையாளம் கண்டுகொள்வதும், அந்தப் பாதையில் உறுதியாக நடந்து மேலும் தன்னை வளர்த்துக் கொள்வதும்தான் நிலையான வளர்ச்சிக்கு ஆதாரமான அடிப்படை. நகல் எடுப்பவர்களுக்கு ஆரம்பத்தில் கவனமும் கைத்தட்டலும் கிடைக்கலாம். ஆனால் அது தற்காலிகமானது மட்டுமே. ஒரு கட்டத்தில் அவர்கள் நிராகரிக்கப்பட்டு விடுவார்கள். 

ஒரிஜினல் மீட்டரில் அடித்து ஆடிய விஜய்சேதுபதி

இந்த நோக்கில் யாரையும் காப்பியடிக்க விரும்பாமல் தனக்கேற்ற சுயமான மீட்டரில் விஜய்சேதுபதி செயலாற்றுவது சிறப்பாக இருக்கிறது. பார்க்கவே ஸ்வீட்டாக இருக்கிறது. அற்புதமாக இருக்கிறது. தன்னிடம் பேசுபவரை ரிலாக்ஸ் செய்ய வைத்து, இணக்கமாகப் பேசி, எவரையும் காயப்படுத்தாமல் உரையாடும் விசேவின் யதார்த்தமான பாணி நமக்குப் புதிதல்ல. இதையே பிக் பாஸ் மேடையிலும் நிரூபித்திருக்கிறார். 

அன்பு காட்டும் அதே வேளையில் ‘தகுந்த சமயத்தில் நான் கண்டிப்பாக மாறி விடுவேன், ஜாக்கிரதை ’ என்கிற எச்சரிக்கையையும் உறுத்தாமல் தந்து விடுவது சிறப்பு.  தோழமையாகப் பேசும் அதே சமயத்தில் ஊமைக்குத்தாக குத்தி விடுவதையும் அநாயசமாகச் செய்கிறார் விசே. 

போட்டியாளர்களில் ஒருவர் நடிகர் ரஞ்சித். இவருடைய நண்பர்,  ‘எங்க ஊர்லலாம் சாப்பிட்டீங்களான்னுதான் முதல்ல கேட்போம்’ என்று ஊர்ப்பெருமையை அநாவசியமாக நிறுவ முயன்ற போது ‘எங்க ஊர்லயும் அப்படித்தான் கேட்போம். நாங்க மட்டும் வெளியே போங்கன்னா சொல்லுவோம்?!” என்று ஜாலியாக சிக்ஸர் அடித்த விசேவின் அந்த டைமிங் அபாரமானது. ஒவ்வொரு பிரசேத்திற்கென்று ஒரு தனியான சிறப்பு இருக்கும்தான். ஆனால் அதையே மிகைப்படுத்தி ரொமான்டிசைஸ் செய்து பேசிக் கொண்டிருப்பது கூட ஒருவகையான பிரிவினைவாதம்தான். 

சமூக வலைதளக் கலாசாரத்தில் பெருகியிருக்கும் நீதிமான்கள்

விசேவின் பாணி ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த சீசனில் நான் இந்தக் கட்டுரைத் தொடரை எப்படி கையாளப் போகிறேன்? பிக் பாஸ் என்பதை வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக, வம்பு பேசும் வாய்ப்பாக மாற்றிக் கொள்வதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நம்முடைய அகத்தை நாமே பார்த்துக் கொள்ளும் கண்ணாடியாக இந்த நிகழ்ச்சியை மாற்றிக் கொள்ள முடியும். என்னால் சற்று முடிந்திருக்கிறது. 

‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் ஃபகத் பாஸில் கேரக்டர் பேசும் ஒரு வசனம் வரும். “ஒவ்வொருத்தன் வீட்லயும் ஒரு ஒன்றரையணா CCTV காமிராவை மாட்டி வெச்சிருக்கானுங்க.. என்னமோ… இவனுங்க ரொம்ப யோக்கியனுங்க மாதிரி… மத்தவங்களை வாட்ச் பண்றாங்க” என்று முகில் பாத்திரம் பேசும் வசனம் குதர்க்கமானது என்றாலும் அதில் ஒருபகுதி உண்மையும் உள்ளது. 

நாம் எப்போதுமே மற்றவர்களை கை நீட்டி குறையும் புகாரும் சொல்வதில் நிறைய ஆர்வமுடையவர்களாக இருக்கிறோம்.  பிரபலங்கள், தனிநபர்கள் என்று சர்ச்சையில் சிக்கும் எவரையும் விட்டு வைப்பதில்லை. அதிலும் சமூகவலைத்தள கலாசாரம் பெருகியிருக்கும் காலத்தில் ஏறத்தாழ நாம் அனைவருமே நீதிமான்களாக மாறி விட்டோம். “என்ன இருந்தாலும் அவன் பண்ணது தப்புத்தான் மாப்ளே” என்று இன்ஸ்டன்ட் தீர்ப்பு வழங்குதில் எக்ஸ்பர்ட்டுகளாக மாறி விட்டோம். 

ஆனால் – ஒரு கணம்.. ஒரேயொரு கணம், இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் நாம் என்ன செய்திருப்போம், என்ன செய்திருக்கிறோம் என்று நிதானித்து யோசித்துப் பார்த்தால் மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டி காட்டமாக விமர்சிக்கும் அடிப்படையான தகுதி நமக்கில்லை என்கிற நிஜம் புரிந்து விடும். இப்படி ஒவ்வொருவருமே தங்களை சுயபரிசீலனை செய்து கொண்டாலே சமூகத்தில் தவறுகளின் பங்கு கணிசமாக குறைந்து விடும். மாறாக நம் குறைகளை சௌகரியமாக ஒளித்துக் கொண்டு மற்றவர்களின் குறைகளை மிகைப்படுத்தி வம்பு பேசுவதால்தான் சண்டையும் சர்ச்சைகளும் நெகட்டிவிட்டியும் பெருகிக் கொண்டே போகிறது. 

ஆக.. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நாமே நம்மை எப்படி சுயபரிசோதனை செய்து கொள்வது என்கிற ஆதாரமான விஷயத்தை இந்தக் கட்டுரைத் தொடரிலும் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுப்படுத்தி இம்சை செய்யப் போகிறேன் என்பதை முன்கூட்டியே சொல்லி விடுகிறேன். அதே சமயத்தில் கருத்து கந்தசாமியாக மாறி அட்வைஸ் மழை பொழிவதிலும் உடன்பாடில்லை. முன்பு சொன்ன லாஜிக் மாதிரி நானே நிறைகளையும் குறைகளையும் கொண்ட ஆசாமிதான். கவுண்டமணி ஒரு நகைச்சுவைக் காட்சியில் சொல்வது மாதிரி “மத்தவங்களை திருத்தறது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம முதல்ல திருந்துவம்டா” என்பதுதான் என் பாலிசி. 

Bigg Boss Tamil 8

கமலுக்கு சிறந்த மாற்றாக இருந்தாரா விசே?

ஓகே.. நிகழ்ச்சியைப் பற்றிப் பார்ப்போம். ஒருவர் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளும் போது ‘வேட்டிக்குள் ஓணாணை விட்டுக் கொண்டது மாதிரி’ என்று சொல்வது வழக்கம். அதைப் போல நண்டு என்கிற பிராண்டில் வேட்டி விளம்பரம் வருவது இந்த நிகழ்ச்சியின் உள்ளடக்கத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. இதில் கலந்து கொள்வதின் மூலம் சிலர் சொந்த செலவு சூனிய அனுபவத்தை அடையக்கூடும். 

பின்னணியில் நாட்டுப்புறக் கலைஞர்கள் இசைத்து ஆட, பாடகர் அறிவு ராப் இசையில் பாடுவதுடன் நிகழ்ச்சி துவங்கியது.  ‘நானும் ரவுடிதான்’ பட கேரக்டர் ஸ்டைலில் மீசை, தாடி இல்லாமல் வெள்ளை கோட் சூட்டில் மிதமான ஒப்பனையுடன் வந்திறங்கினார் விஜய்சேதுபதி. ‘எனது ஒப்பனையைப் போலவே என்னுடைய ஹோஸ்டிங்கும் இயல்பாகத்தான் இருக்கும்’ என்று சொல்லாமல் சொல்லியதைப் போல் அவரது தோற்றம் இருந்தது. 

கமலின் இடத்தில் விசே என்ன செய்யப் போகிறார்? என்பதே பலருக்கும் பெரிய கேள்வியாக இருந்திருக்கும். எனவே ‘நம்ம கைல இல்லாத ஒரு விஷயத்தை ஏன் பெரிசா பிளான் பண்ணி அவஸ்தைப்படணும்.. அது பாட்டுக்கு போகட்டும். தீர்ப்பு வழங்கற நாள்ல நான் ராஜாவா இருப்பேனா.. அரக்கனா இருப்பேனா..  எப்படி இருப்பேன்னு எனக்கே தெரியாது.  ஏதாவது பிரச்னை வந்தா நீங்களும் நானும் சேர்ந்து பங்கு போட்டுப்போம்” என்று இந்த ஆதாரமான சந்தேகத்தை மிக அநாயசமாக விசே தாண்டி வந்த ஸ்டைல் சிறப்பு. 

‘இதுதான் பெட்ரூம்.. படுத்துக்கலாம்.. இதுதான் கிச்சன்.. சமைக்கலாம்..’ என்று வீட்டுத்தரகர் மாதிரியே விசேவின் ‘ஹவுஸ் டூர்’ எளிமையாக முடிந்து விட்டது. (இந்த மாதிரி சமயங்களில்தான் கமலின் பன்ச்களை மிஸ் செய்கிறோம்!). “ஒருத்தர் வெளில யாரா வேணா இருக்கலாம். ஆனா இந்த வீட்டுக்குள்ள எல்லோரும் ஒண்ணு. அந்தப் பாடத்தை வீடு கத்துக் கொடுக்கும்ன்னு நம்பறேன்” என்று விசே சொன்ன அந்த முகவுரை எளிமையானது மட்டுமல்ல, சிறப்பானதும் கூட. 

Bigg Boss Tamil 8

எட்டாவது சீசனின் வீடு, வழக்கம் போல் மிக அட்டகாசமாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அழகிற்குள்தான் எப்போதும் ஆபத்தும் ஒளிந்திருக்கும். ஒரு பெரிய வெள்ளைக் கோட்டின் மூலம் வீடு இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு பகுதிகளில் ஒரு பகுதி அதிக வசதிகளைக் கொண்டதாகவும் இன்னொரு பகுதி வசதிகள் குறைந்ததாகவும் இருந்தது. ஆக.. பிக் பாஸ் தனது திருவிளையாடல்களை சிறப்பாக ஆடுவதற்கான களத்தை நன்றாகவே அமைத்துக் கொண்டிருக்கிறார். 

ஒன்பது ஆண்கள், ஒன்பது பெண்கள் 

இந்த சீசனில் சில பிரபலமான முகங்களைத் தாண்டி நிறைய பரிச்சயமற்ற முகங்கள்தான் இருக்கின்றன. பல போட்டியாளர்கள் விஜய் டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் இருந்தே தேர்வு செய்யப்பட்டிருப்பது random selection என்னும் தன்மையைப் பாதிக்கலாம். ஒருவகையில் பிரபலமான முகங்களை விடவும் பிரபலமற்ற முகங்கள் போட்டியாளர்களாக இருப்பதுதான் நல்லது. பிரபலம் என்றால் அவரைப் பற்றிய முன்கூட்டிய தீர்மானங்களுடன் அணுகி ஏமாற்றம் அடைவோம். அதுவே பிரபலமற்ற முகம் என்றால் ஒரு விநோதமான சூழலில், ஒரு தனிநபர் செய்யும் சரி-தவறுகள், நிறை-குறைகள் போன்றவை பளிச்சென்று தெரிந்து விடும். அவை நமக்கு பாடமாகவும் அமையும்.

9 ஆண்கள், 9 பெண்கள் என்று சரிவிகித சமானத்தில் பதினெட்டு போட்டியாளர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் யார் யார்?..

படத்தயாரிப்பாளரும் பிக் பாஸ் விமர்சகருகமான ‘Fatman’ ரவீந்திரன், மகாராஜா திரைப்படத்தில் விசேவிற்கு மகளாக நடித்த சாச்சனா, ‘குக் வித் கோமாளி’ புகழ் தர்ஷா குப்தா, முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் பாடகியுமான ரம்யாவின் கணவர் சத்யா, எனது பள்ளிக்கூடக்காலத்தில் இருந்தே ஆங்க்கராக இருக்கும் தீபக், புத்தக வாசிப்பாளரான ஆர்.ஜே.ஆனந்தி, டான்ஸரும் ‘குவிகோ’ புகழுமான சுனிதா, கானா பாடகன் ஜெஃப்ரி, நடிகரும் சமீபத்திய கலாசாரக் காவலருமான ரஞ்சித், சீரியல் நடிகை பவித்ரா, தனது குரல் குறித்து தாழ்வுணர்வு கொண்டிருந்த சவுந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், தமிழ்ப்பேச்சு முத்துக்குமரன், ‘கலக்கப் போவது யாரு’ புகழ் ஜாக்குலின் போன்றவர்கள் அடுத்தடுத்து வந்தார்கள்.

‘நான் நானா இருக்கப் போறேன்.. நான் யாருன்னு எனக்கே தெரியணும்.. இந்த மேடை மூலமாக புகழைக் கூட்டிக்கணும்.. இந்த வாய்ப்பு என்னோட வாழ்க்கையை மாத்தும்ன்னு நம்பறேன்..’ என்கிற டெம்ப்ளேட் வாசகங்களை ஏறத்தாழ அனைத்துப் போட்டியாளர்களும் தவறாமல் சொன்னார்கள். 

‘கைத்தட்டியே கெடுத்து வெச்சிருக்கீங்க’  – அதிரடியாக கலாய்த்த விசே

போட்டியாளர்களில் முதலாவதாக நுழைந்தவர் ரவீந்திரன். படத்தயாரிப்பாளர் மற்றும் பிக் பாஸ் பற்றி ரெவ்யூ செய்து பிரபலமடைந்தவர். தன்னுடைய உருவத்தைப் பற்றிய கிண்டலையே ‘Fatman’ என்கிற அடையாளமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். ‘இந்த ஷோவைப் பொறுத்தவரை, ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாதுன்றது.. எனக்குத்தான் நிறையப் பொருந்தும்’ என்று தன்னையே சுயபகடியாக சொல்லிக் கொண்டார். இவருடைய இயற்பெயரை வைக்காமல் அடையாளப் பெயரையே மைக் பெல்ட்டில் பிக் பாஸ் டீம் வைத்திருப்பது நெருடல். 

‘இத்தனை நாள் மத்தவங்களை வெச்சு செஞ்சேன். இப்ப என்னைச் செய்யப் போறாங்க’ என்பதையே சந்தோஷமான அலுப்புடன் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார் ரவீந்திரன். பிக் பாஸ் ஆட்டத்திற்கு மனபலம்தான் அடிப்படை என்றாலும் மிகையான உடல் எடை  ரவீந்திரனுக்கு ஒரு சில டாஸ்க்குகளில் மைனஸ் பாயிண்ட்டாக அமைய வாய்ப்புண்டு. அதைத்தாண்டி வருவது இவருக்கு ஒரு சவால். 

‘இந்த இடத்துலதான் நீங்க கையத்தட்டணும்’ என்கிற மாதிரி பேச்சை நிறுத்தி பார்வையாளர்களைப் பார்ப்பார் கமல். ஆனால் விசே, மக்கள் அநாவசியமாக கைத்தட்டினால் “இப்படி தட்டித் தட்டியே நிறைய பேரை கெடுத்து வெச்சிருக்கீங்க” என்று ஜாலியான டைமிங்கில் விமர்சித்தது சிறப்பு. 

“உங்க ஆரம்பக் கால படங்களை பார்த்திருக்கேன்.  ஒரு நல்ல நண்பனா உங்களை உணர்ந்திருக்கேன்.. ஆனா இப்ப அதன் நிறம் மாறியிருப்பது போல் தெரிகிறதே?’ என்று நடிகர் ரஞ்சித்தின் சமீபத்திய திரைப்படம், இணையப் பேச்சுக்கள் ஆகியவற்றை முன்வைத்து ஊமைக்குத்தாக குத்தினார் விசே. “நான் விதைச்சது ஒண்ணு.. முளைச்சது ஒண்ணு’ என்று ரஞ்சித் சிரித்து சமாளிக்க வேண்டியிருந்தது. ‘சாமி.. தங்கம்.. என்று தேனாகப் பேசுகிற ரஞ்சித், ‘இந்த நாடகக் காதல் இருக்கே’ என்று கலாசார காவலராக பேசி நிச்சயம் சிக்கலில் மாட்டிக் கொள்வார் என்று தோன்றுகிறது. 

அவமானம் தாண்டாத வெற்றி கிடையாது

‘எனக்கு ஏதாவது அட்வைஸ் சொல்லுங்களேன்’ என்று புத்திசாலித்தனமாகப் பேச முயன்ற போட்டியாளர்களை பதிலுக்கு கலாய்த்தார் விசே. கானா பாடகன் ஜெஃப்ரியின் எளிமையான பின்னணி  மற்றும் அறிமுகம் முடிந்ததும், திரும்புகிற வழியில் ‘நானே கொஞ்சம் ஃபீல் ஆயி்ட்டேன்’ என்று நெகிழ்ந்தபடி விசே சொன்னது அதுவரையில் பிக் பாஸில் பார்க்காத காட்சி. 

வீடியோ உரையில் சிறப்பாகப் பேசிய அர்னவ், மேடைக்கு வந்த போது சொதப்பினார். “நீங்க எதிர்கொண்ட அவமானத்தை எப்படி எதிர்கொண்டீர்கள்?’ என்று விசேவிடம் அவர் கேட்க “நீங்க இந்தப் பக்கம் வந்துடுங்களேன்.. நான் பதில் சொல்றேன்” என்று அவரை சைலண்ட்டாக கலாய்த்த விசே “இதெல்லாம் பழைய மாடல் கேள்வி. வெற்றியை நோக்கி செல்லும் போது அவமானங்களைத் தவிர்க்க முடியாது” என்று இயல்பாக பதில் சொன்னது சிறப்பு. இதுவே வேறு தொகுப்பாளராக இருந்தால் “ஒரு சமயத்துல என்ன ஆச்சுன்னா’’ என்று தன் அவமானக் கதையைப் பகிர்ந்து பரிதாபத்தையும் கைத்தட்டலையும் வாங்கியிருப்பார். 

கமலையும் முத்தத்தையும் பிரிக்க முடியாது என்பது விசேவிற்கும் பொருந்தும். கமல் பெண்களுக்கு என்றால் விசே ஆண்களுக்கு. கேட்கும் ஆண்களுக்கு எல்லாம் கன்னாபின்னாவென்று முத்தம் தந்து கெடுத்து வைத்திருக்கிறார் விசே. ‘என்னடா. யாரும் இதை ஆரம்பிக்கவில்லையே?’ என்று பார்த்த போது அதைக் கேட்ட அர்னவ், பிறகு அநாவசியமாக உரையாடலை இழுத்த போது “ஒண்ணு சொல்றேன். நோட் பண்ணிக்கோங்க.. உங்களுக்கு நல்லது நடக்கும் போதேல்லாம் பேசியே அதைக் கெடுத்துடாதீங்க” என்று விசே செல்லமாக எச்சரித்தது சரியான பாயிண்ட். 

ஆனால் விசே சறுக்கிய இடங்களும் உண்டு. அகழ்வாராய்ச்சியிலிருந்து தோண்டியெடுத்த அம்மன் சிலை மாதிரி இருந்த பிக் பாஸ் கோப்பையின் சிறுவடிவத்தை ஒவ்வொருவரிடமும் தந்து “இதைப் பத்திரமா வெச்சுக்கங்க.. நூறு நாள் ஆடிட்டு திரும்பி வந்து கொடுத்தீங்கன்னா.. ஒரிஜினல் தரேன்” என்கிற பாட்டை திரும்பத் திரும்ப பாடிய போது ‘அப்ப இது டூப்ளிகேட்டா?’ என்று துடுக்காக கேட்டாலும் ஆர்ஜே ஆனந்தி கேட்டது ஜாலியான கேள்விதான். ஆனால் அதற்கு சற்று டென்ஷன் ஆன விசே “அதெப்படி டூப்ளிகேட்டுன்னு கேட்கலாம்.. என்னத்த படிச்சிருக்கீங்க.. இவங்க படிச்ச புக்லாம் நீங்க படிக்காதீங்க” என்று காண்டானது நெருடலான காட்சி. 

ஆனால் ஒன்று. விசே இணக்கமாகவும் தோழமையாகவும் பேசுவது ஒரு நல்ல பண்பு. இப்படிப்பட்டவர்களிடம் நாம் கூடுதல் மரியாதையாகவும் அன்பாகவும் எதிர்வினையாற்றுவதுதான் சிறப்பு. மாறாக அவர்களிடம் அட்வான்டேஜ் எடுத்துக் கொண்டு ஆர்வக் கோளாறாக செயல்படுவது சமயத்தில் பேக்பயர் ஆகி விடலாம். சில போட்டியாளர்களிடம் இதைப் பார்க்க முடிந்தது. இதுவே கமலாக இருந்திருந்தால் கப்சிப்பாக இருந்திருப்பார்கள். 

ஆண்கள்  Vs பெண்கள் என்பதுதான் இந்த சீசனின் தீமாக இருக்குமா?

ஆண்கள் Vs பெண்கள் என்பதுதான் இந்த சீசனின் அடிப்படைக் கருத்தாக்கமாக இருக்கும் என்று அறிவித்து ஆட்டத்தை ஆரம்பித்தார் பிக் பாஸ். பாலின அடிப்படையில் இப்படி போட்டியாளர்களைப் பிரிப்பது பழமைவாத அணுகுமுறை. இதுதான் நிரந்தரமான ரூலாக இருக்கப் போகிறதா அல்லது பிக் பாஸ் ஆரம்பத்தில் கொளுத்தி விட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறாரா என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

போட்டியாளர்கள் ஒவ்வொருவருவராக நுழைய, கதவை உடனே திறக்காமல் ‘கெத்து’ காட்டினார் பிக் பாஸ். ஆறேழு நபர்கள் சேர்ந்ததும் ஆரம்பத்திலேயே தனது திருவிளையாடலை ஆரம்பித்து விட்டார். ‘யார் எந்தப் பக்கம் இருக்கிற வீட்டில் இருக்கப் போகிறீர்கள்?.. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்’ என்று கொளுத்திப் போட்டு குடுமிச் சண்டையை வெற்றிகரமாக ஆரம்பித்தார். இது நன்றாகவே பற்றிக் கொண்டது. 

சுயநலம்தான் மனிதனின் அடிப்படையான குணாதிசயம். அதில் தவறும் இல்லை. தொடர்ந்து சுயநலமாகவே இருப்பதுதான் தவறு. அதிக வசதிகள் கொண்ட பகுதிக்காக இரு தரப்பும் கொஞ்சம் சீரியஸாகவும் பாவனையான நகைச்சுவைப் பேச்சுடனும் மோதிக் கொண்டது. ஆனால் முடிவை எட்ட முடியவில்லை. ‘உங்களால முடிவு எடுக்க முடியலைன்னா, எல்லோருமே வெளியேதான் படுக்கணும்’ என்று பிக் பாஸ் நெருக்கடி தந்து வேடிக்கை பார்த்தார். எனவே ஆண்கள் அணி ‘பெருந்தன்மையான’ பாவனையுடன் இறங்கி வந்தது. “ஓகே.. நாங்க விட்டுத் தரோம். ஆனா ஒரு கண்டிஷன். நாங்க சொல்ற ஒரு வாரத்துல ஆண்கள் யாரையும் நீங்க நாமினேட் பண்ணக்கூடாது. இதுதான் எங்க தியாகத்திற்கான விலை” என்று டீல் பேசியது. 

பேரம் பேசி டீல் போட்ட  ஆண்கள் அணி 

பிக் பாஸ் போன்ற நுட்பமான ஆட்டங்களில் சொகுசுகளை அதிகம் எதிர்பார்க்கக்கூடாது. ஆனால் அந்த நேரத்து மனநிலையில் தங்களுக்கான நடைமுறைப் பிரச்சினைகளுக்கு பெண்கள் அணி முக்கியத்துவம் தந்து இந்தப் பேரத்திற்கு சம்மதம் சொன்னது. இது ‘ஜென்டில்மேன்’அக்ரிமெண்ட்டா, இல்லையா என்பது போக போகத்தான் தெரியும். 

ஆனால் இவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். இவர்கள் மட்டும் கூடி நிகழ்த்தும் பேரத்தின் ஒப்பந்தம், பின்னால் வருகிற போட்டியாளர்களையும் பாதிக்கும். இதை ரவீந்திரன் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்டினார். “நீங்க போட்ட டீலுக்கு நாங்க எப்படி ஓகே சொல்ல முடியும்?” என்கிற கலகம் நிச்சயம் எழும். பிக் பாஸின் நோக்கமும் அதுதானே? ஆரம்ப நாள் புதுசு என்பதால் பிறகு வந்த பல போட்டியாளர்கள் இந்த டீலுக்கு அரைமனதுடன் ஒப்புக் கொண்டாலும் தர்ஷிகா, ஜாக்குலின் போன்றவர்கள், ஆண்கள் அணி விதித்த அநியாயமான விதியை காரசாரமாக விமர்சித்தது சிறப்பு. 

அதிலும் ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ என்பது மாதிரி இருந்த ஜாக்குலின் இறங்கி அடித்து ஆடினார். ‘நான் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டால் இந்தப் பேரத்திற்கு ஒப்புக் கொண்டது மாதிரி ஆகி விடும்’ என்று வெளியே படுத்து ஒத்துழையாமைப் போராட்டத்தை ஆரம்பித்தது, புத்திசாலித்தனமான ஸ்ட்ராட்டஜி. ‘ஆடுகள் தங்களை ஆடு என்ற உணர்ந்த கணத்தில் மந்தையில் இருந்து விலகி விடுகின்றன’ என்பது ஒரு பொன்மொழி. ஜாக்குலினின்  ஆட்டம் அதை உறுதிப்படுத்தியது. இப்படி தனித்துவமாக விளையாடி காமிராவிற்கு தீனி தருபவர்களால் மட்டுமே இந்த ஆட்டத்தில் அதிக நாட்கள் நீடிக்க முடியும். ஜாக்குலின் இந்த நுட்பத்தை அறிந்தவராக இருக்கிறார் என்று தோன்றுகிறது.

24 மணி நேரத்தில் முதல் எலிமினேஷன் – அதிரடி ஆட்டமாடும் பிக் பாஸ்

துவக்க நாளிலேயே போட்டியாளர்களிடமிருந்த சில நிறங்கள் அம்பலமாகின. வீட்டிற்குள் நுழையும் போது ‘லேடீஸ் ஃபர்ஸ்ட்’ என்று தன்னை கனவானாக காட்டிக் கொண்ட தீபக், பிறகு ‘வசதி கொண்ட இடத்திற்காக’  பெண்கள் அணியிடம் முட்டி மோதினார். “அப்ப லேடீஸ் ஃபர்ஸ்ட்ன்னு சொன்னீங்களே?” என்று இவருக்கு சரியாக செக் பாயிண்ட் வைத்தார் ஆனந்தி. வம்பாக பேசி தீபக் சர்ச்சைக்கு உள்ளாவார் என்று தோன்றுகிறது. 

‘எங்களோட கடைக்குட்டி சாச்சானாவிற்காக விட்டுக் கொடுங்களேன்’ என்று பெண்கள் தரப்பு கெஞ்சிய போது ‘இந்த யானைக்குட்டிக்காக நீங்களும் விட்டுத் தாங்க” என்று செல்ஃப் கலாய்த்தலை நிகழ்த்தினார் ரவீந்திரன். தனது குரல் குறித்து தாழ்வுணர்வு கொண்டிருந்த சவுந்தர்யாவிடம் “நீங்க முதல்ல பொம்பளைக் குரல்ல பேசுங்க” என்று நக்கலடிப்பதின் மூலம் சறுக்கினார் தர்ஷிகா. சவுந்தர்யாவின் முகம் வெளுத்து பிறகு சுதாரித்துக் கொண்டார். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்கிற பாடலை மேடையில் உணர்ந்து சொன்ன முத்துக்குமரன் பலரின் மனம் கவர்ந்த போட்டியாளராக நீடிக்கக்கூடும் என்கிற அடையாளங்கள் தெரிகின்றன. 

Bigg Boss Tamil 8

கிச்சன் எந்த அணிக்குச் செல்லப் போகிறது என்பது உள்ளிட்ட சில முக்கியமான பிரச்சினைகள் இன்னமும் பாக்கியில் இருக்கிற நிலையில், சொகுசு பெட்ரூமிற்கான முதல் பஞ்சாயத்தே இன்னமும் முடியவில்லை. 

முதல் நாளிலேயே தனது கெத்தை பலமாக காட்டாவிட்டால் அவர் என்ன பிக் பாஸ்? ‘இருபத்து நான்கு மணி நேரத்தில் ஒரு எலிமினேஷன் நிகழும்’ என்று முதல் திரியையே ஆயிரம் வாலா பட்டாசாக கொளுத்திப் போட்டிருக்கிறார். அது எப்படியெல்லாம் வெடிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

இந்த எட்டாவது சீசனில் விஜய் சேதுபதியின் ஹோஸ்டிங் எப்படியிருந்தது… உங்களுக்குப் பிடித்த போட்டியாளர்கள் யார் என்பதைக் கமெண்டில் சொல்லுங்கள். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.