அடுத்த அதிரடி வெற்றிக்கு ரெடியாகி விட்டார் சந்தானம். ‘வடக்குப்பட்டி ராமசாமி’, ‘இங்க நான்தான் கிங்கு’ படங்களை அடுத்து ஹாரர் காமெடியில் களம் இறங்கியிருக்கிறார். கடந்த 2023ம் வெளியான அவர் நடிப்பில் வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ அதிரி புதிரி வெற்றியாக அமைந்ததினால், இப்போது அதன் இரண்டாம் பாகம் ரெடியாகி வருகிறது.
சந்தானத்தைப் பொறுத்தவரை, ‘தில்லுக்கு துட்டு’, ‘தில்லுக்கு துட்டு 2’ மற்றும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஆகிய ஹாரர் காமெடிகள் அவருக்குப் பெரியளவில் கைகொடுத்து வருகின்றன. அவரது ஆடியன்ஸ் அவரிடம் ஹாரர் காமெடியை எதிர்பார்ப்பதால், ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ வெளியானதும், அதன் இரண்டாம் பாகும் எப்போது வரும் எனக் கேட்க தொடங்கிவிட்டனர். ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தை அடுத்து ‘டி.டி.ரிட்டர்ன்ஸ் 2’ வேலைகள் தொடங்கிவிட்டன. முதல் பாகத்தை இயக்கிய எஸ்.பிரேம் ஆனந்த்தான் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.
”சந்தானம் சாருக்கு காமெடி மட்டுமல்ல, கதை, திரைக்கதை பண்றதிலும் திறமையானவர். ஒரு வரி வசனம் கூட, அவர் கைப்பட்டதும் பல பரிமாணங்கள் எடுக்கும். அதிலிருந்து அவர் அலசி எடுத்து, இது ஒர்க் அவுட் ஆகும்னு அவர் கணிக்கிறது, சரியா இருக்கும்.” என்கிறார் இயக்குநர் பிரேம் ஆனந்த்.
‘டிடி ரிட்டர்ன்ஸ் 2′ முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு பிரமாண்டமான சொகுசு கப்பல் ஒன்றில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் படத்தில் `நிழல்கள்’ ரவி, `லொல்லு சபா’ மாறன், கிங்ஸ்லி, முனீஸ்காந்த், சாய்தீனா என அவரது வழக்கமான டீம் நடிகர்கள் இருக்கிறார்கள். ஹீரோயின்களாக புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இப்போது பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. இம்மாதம் கடைசி வரை, அங்கே படப்பிடிப்பு நடைபெறும் என்றும், முதல் பாகத்தை விட, இதில் காமெடி டபுள் மடங்கு கேரன்டி என்றும் சொல்கிறார்கள். படத்தின் டைட்டிலை ‘டிடி ரிட்டர்ன்ஸ் 2’ என வைக்காமல், புது டைட்டிலை வைக்க ஆலோசித்து வருகின்றனர்.
அது சரி, சந்தானம் படங்களில் புதுமுக ஹீரோயின்கள் மட்டுமே இடம்பெறுவது ஏன் என்று சந்தானத்திடம் கேட்டால், ”எங்க கதைகளுக்குப் புதுமுகங்கள்தான் செட் ஆகுறாங்க. அவர் காமெடியனா இருந்து ஹீரோவானவர், ஸோ, அவரோட நடிச்சா தங்களோட மார்க்கெட் வேல்யூ என்னாகுறது?னு நினைக்கிறவங்களும் இருக்காங்க. அப்படி நினைக்கற சில பெரிய ஹீரோயின்களை வற்புறுத்தி, எங்க படத்துல நடிக்க வைக்க விரும்பல. கதை பிடித்து நடிக்க முன்வந்தால், ஓகே. இல்லேனா, கதைக்கு எப்படி ஆட்கள் தேவைவோ, அப்படி முகங்களா தேடி கண்டுபிடிச்சுக்கலாம்னு நினைக்கறோம்.” என்கிறார் சந்தானம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…