சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் வளர்ச்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளின் காரணமாக வனவிலங்குகள் தங்களின் வாழிடங்களையும் வழித்தடங்களையும் இழந்து தவித்து வருகின்றன. உணவு, தண்ணீர் தேடி குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களில் நடமாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால், நீலகிரியில் மனித – வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக யானை, கரடி, காட்டு மாடு, சிறுத்தை போன்ற வனவிலங்குகளுடன் மனித எதிர்கொள்ளல்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கோத்தகிரி அருகில் உள்ள கெங்கரை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தேயிலை தோட்டம் வழியாக நேற்று மாலை வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது யானை தாக்கியதில் படுகாயமடைந்தார். உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
“கடந்த சில நாள்களாக இந்த பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினரிடம் தெரிவித்தும் அவர்கள் யானைகளை கண்காணிக்க முன்வரவில்லை. இதனால், பரிதாபமாக உயிர் பறிபோனது” என்று கூறி, வனத்துறையைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
மக்கள் போராட்டத்தால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், வனத்துறை மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ” இந்த பகுதியில் தற்போது நடமாடி வரும் யானைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஆனாலும், எதிர்பாராத விதமாக இந்த இறப்பு ஏற்பட்டிருக்கிறது. உயிரிழந்த இளைஞர் விஜயராஜ் குடும்பத்திற்கு முதல் கட்ட நிவாரண தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டங்களில் நடமாடி வரும் யானைகளை வனத்துக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்றனர்.