அன்று ரஜினிக்கு அம்மா; இன்று டீக்கடை ஓனர் – நினைவுகள் பகிரும் நடிகை பத்மஶ்ரீ

ரஜினியும் பிரபுவும் நடிச்ச குரு சிஷ்யன் படம் பார்த்திருக்கீங்களா..? அதுல ரஜினிக்கு அப்பாவா நடிகர் செந்தாமரையும், அம்மாவா நடிகை பத்மஶ்ரீயும் நடிச்சிருப்பாங்க.

தன் நடிப்பால பலரையும் கவனிக்க வச்ச நடிகை பத்மஶ்ரீ, கடந்த 6 வருஷமா சென்னையில டீக்கடை வெச்சி நடத்திட்டு வர்றாங்கன்னு கேள்விப்பட்டு, அவங்க கடைக்குப் போயிருந்தோம். ‘விகடன் என்னைக் கண்டுபிடிச்சு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். ஆனா, எல்லாருக்கும் நான் இருக்கிற இடம் தெரிய வேணாமே’ என்கிற கோரிக்கையுடன் நம்முடன் பேச ஆரம்பித்தார்.

நடிகை பத்மஶ்ரீ

”எங்கப்பா ஒரு டாக்குமென்ட்ரி தயாரிப்பாளர். அந்தக் காலத்துல திருப்பதி பற்றிய டாக்குமென்ட்ரிகூட எடுத்திருக்கார். என்கூட பிறந்தவங்க மொத்தம் 6 பேர். அப்பாவுக்கு உடம்பு முடியாம போனதும், நான் நடிகையாகி குடும்பத்தைப் பார்த்துக்கிறேன்னு பொறுப்பெடுத்துக்கிட்டேன். ‘உன்னால முடியுமா’ன்னு அப்பா கேட்டதுக்கு, ‘எனக்கு அந்த தைரியம் இருக்குப்பா’ன்னு சொன்னேன். அந்தளவுக்கு போல்டான கேரக்டர் நான். என்னோட முதல் படம் ‘கல்தூண்.’ சிவாஜி சாரோட படம். அந்தப்படத்துக்கான நடிகர் நடிகையர் செலக்‌ஷன், ஒரு கல்யாண மண்டபத்துல நடந்துட்டிருந்துச்சு. நடத்தியவர் மேஜர் சுந்தர்ராஜன் சார். நானும் அந்த ஆடிஷன்ல கலந்துக்கப் போயிருந்தேன். மேஜர் சுந்தர் ராஜன் சார் ஒரு சீன் சொல்லி எல்லாரையும் நடிக்கச் சொன்னார். குடிகார புருஷன் மனைவியை அடிச்சுக் கீழே தள்ளி மிதிக்கிற சீன் அது. அடிவாங்கினதும், கீழே விழுந்து அழுதுக்கிட்டே தரையில உருளணும். அத யாருமே சரியா செய்யலை. நான் செஞ்சேன். அடி விழுந்தவுடனே டமால்னு தரையில விழுந்தேன். அப்படியே உருண்டு நடிக்க ஆரம்பிச்சேன். ‘இந்தப் பொண்ணுக்கு கேரக்டர் மேல இன்வால்மென்ட் வந்திடுச்சு’ன்னு சொல்லி, அந்தப் படத்துல வாய்ப்புக் கொடுத்தார் மேஜர் சுந்தர்ராஜன். அப்போ எனக்கு 19 வயசு” என்றவர், அந்த நாள்களோட நினைவுகளுக்குள்ள கொஞ்ச நேரம் மூழ்கினார்.

” ‘அவசரக்காரி’னு ஒரு படத்துல சத்யராஜ் ஜோடி, ‘சொந்தக்காரன்’ல அர்ஜூனுக்கு அம்மான்னு நடிக்க ஆரம்பிச்சேன். இதே மாதிரிதான் ‘குரு சிஷ்யன்’ வாய்ப்பும் கிடைச்சுது. ‘வயசான கேரக்டர் செய்யணும், பரவாயில்லையா’ன்னு கேட்டாங்க. தலை பூரா வெள்ளையா நடிக்க சொன்னாலும் ஓகேன்னு சொன்னேன். அப்புறம்தான் ரஜினியோட அம்மா ரோல்னு தெரிஞ்சிது. அதுல ஒரு எமோஷனலான சீன்ல ரஜினியை கட்டிப்பிடிச்சுக்கிட்டு அழணும். நான் நடிச்சு முடிச்சதும், ‘சிலர் என்னைத் தொட்டு நடிக்க பயப்படுவாங்க. ஆனா, நீங்க அந்த கேரக்டராவே மாறி நடிச்சீங்க’ன்னு பாராட்டினார் ரஜினி.

கல்தூண் படத்தில்

இதுக்கு நடுவுல குடும்பத்துல இருந்தவங்க எல்லோரையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துட்டேன். நானும், என்னோட 28 வயசுல கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். ஒரு பெண் குழந்தை பிறந்தா.

இதுக்கப்புறம், துர்தர்ஷன் நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல எனக்குக் கிடைச்சதெல்லாம் நெகட்டிவ் ரோல்தான். வீட்டுக்கு அடங்காத பொம்பளை கேரக்டரா, புருஷனுக்கு அடங்காத பொம்பளை கேரக்டரா… பத்மஶ்ரீயை கூப்பிடுன்னு சொல்லுவாங்க. அதுமட்டும்தான் மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். மத்தபடி, டிவிலயும் ஒரு ரவுண்டு வந்தேன். ‘அதிகாரப்பிச்சை’ன்னு ஒரு டிராமா. ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல படிச்சு முடிச்ச விஜய்ங்கிற ஒருத்தர் அந்த டிராமாவுல நடிச்சார். அவருக்கு ஜோடி நான். அந்த விஜய்தான் இப்போ எல்லாருக்கும் தெரிஞ்ச ‘தலைவாசல்’ விஜய். படிப்படியா தூர்தர்ஷன்ல ஏ கிரேட் ஆர்ட்டிஸ்ட் அளவுக்கு வளர்ந்தேன்.

குரு சிஷ்யன் படத்தில்

இந்த நேரத்துல ரேடியோக்கள்ல விளம்பரம் பேசுற வாய்ப்பு வந்துச்சு. கமல் நடிச்ச ‘பேசும் படம்’ நினைவிருக்கா? அந்தப் படத்துக்கான விளம்பரம் பேசுற வாய்ப்பு கிடைச்சது. அதுக்கு எனக்கு கிடைச்ச சம்பளம் 60 ரூபாய்.

புதுசா ஆரம்பிச்சிருக்கிற ஒரு ஹோட்டலுக்கு விளம்பரம் பேசணும்னாங்க. அந்த ஹோட்டல்தான் சரவண பவன். தலப்பாக்கட்டி மதுரையில ஆரம்பிச்சப்போ அதுக்கும் விளம்பரம் பேசியிருக்கேன். ஒரு வாரப்பத்திரிகைக்கு விளம்பரம் பேசிக்கொடுங்கன்னு ரமேஷ் பிரபா சார் கேட்டார். என் குரல்ல வெளிவந்த அந்த விளம்பரம் மூலை முடுக்கெல்லாம் பிரபலமாச்சு. விவேக் சார்கூட ஒரு படத்தோட காமெடி ட்ராக்ல இந்த விளம்பரம் பற்றி பேசியிருப்பார். இதுக்கப்புறம், ‘எவ்ளோ சவாலான விளம்பரம்னாலும் பத்மஶ்ரீ பேசிடுவாங்க’ன்னு பேர் எடுத்தேன். ‘விருந்தின் நிறைவு வெற்றிலை பாக்கு; விரும்பி வாங்குவது நிஜாம் பாக்கு’ன்னு இப்போ வரைக்கும் ஒரு விளம்பரம் வருதில்லையா? அதுவும் என் குரல்தான்’ என்றவர், அந்த விளம்பரத்தை அப்படியே பேசிக்காட்டி ஆச்சரியப்படுத்தினார்.

”சினிமா, தூர்தர்ஷன், விளம்பரம் பேசுறதுன்னு வாழ்க்கை நிம்மதியா இருந்துச்சு. இப்பவும் நேரம் கிடைச்சா விளம்பரம் பேசுறேன். கணவர் நல்ல மனுஷர். ஒரு பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சுக்கொடுத்திட்டேன். இப்போ, கூடப்பிறந்தவங்க, அவங்க பிள்ளைங்கன்னு எல்லாரும் ஒண்ணா இருக்கோம். சுறுசுறுப்பாவே வாழ்ந்து பழகிட்டதால, வீட்ல சும்மா இருக்கப் பிடிக்கலை. டீக்கடை திறந்தேன். மத்தபடி, முன்னாள் நடிகை இப்போ டீக்கடை நடத்துறதால, ஏதோ சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கேன்னு நினைச்சுடாதீங்க. கடவுள் புண்ணியத்துல என்கிட்ட எல்லா வசதியும் இருக்கு.

காலையில 4 மணிக்கு எழுந்து கடையை திறப்பேன். 12 மணிக்கு மூடிடுவேன். கொஞ்சம் ஓய்வு எடுத்துட்டு சாயங்காயம் 4 மணிக்கு திறந்து ராத்திரி 7 மணிக்கு மூடிடுவேன். நான் சூப்பரா டீ போடுவேன். அக்கம்பக்கத்துல இருக்கிற லேடீஸ் ஏதாவது பிரச்னைன்னா, என்கிட்ட வந்து பகிர்ந்துப்பாங்க. என்னால முடிஞ்ச தீர்வை அவங்களுக்கு நான் சொல்லுவேன். அவங்களுக்கெல்லாம் நான் நடிகை பத்மஶ்ரீ கிடையாது. பத்தக்கா” என்று கம்பீரமாக சிரிக்கிறார், ரஜினியின் அம்மா.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.