இந்தியாவின் முக்கிய நகரங்களில் Zoom போன் சேவை அறிமுகம்!

சென்னை: இந்தியாவில் ஸூம் போன் சேவை அறிமுகமாகி உள்ளது. இப்போதைக்கு இது சில முக்கிய நகரங்களில் மட்டுமே பயனர் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை இந்திய அரசிடமிருந்து கடந்த ஆண்டே பெற்றதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2011-ல் நிறுவப்பட்டது ஸூம் வீடியோ கம்யூனிகேஷன் நிறுவனம். பரவலாக ஸூம் என அறியப்படுகிறது. மீட்டிங், சாட், குரல் வழி அழைப்பு மேற்கொள்ள இந்த தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸில் இதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.

கரோனா பரவலின்போது உலக அளவில் ஸூம் தளம் பயன்படுத்தப்பட்டது. அலுவலகம், பள்ளி, கல்லூரி என பெரும்பாலான இடங்களில் ஸூம் சேவை அவசியமானதாக அமைந்தது. பயனர்கள் இதனை பயன்படுத்துவதும் எளிது.

இந்த நிலையில் தான் ஸூம் போன் சேவை தற்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. முதற்கட்டமாக புனே நகரில் இந்த சேவை பயனர்களுக்கு கிடைக்கும். தொடர்ந்து பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் இதை பயன்படுத்த முடியும் என ஸூம் நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டண சந்தா பயனர்கள் இதனை ‘ஆட்-ஆன்’ (Add On) முறையில் பெற முடியும்.

ஸூம் போன் சேவையை தனியாக பெற மாதாந்திர அல்லது வருடாந்திர சந்தா செலுத்த வேண்டும். அதன் மூலம் ஸூம் தளத்தில் இருந்து தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். வணிக நிறுவனங்களுக்கு இது பெரிதும் பயன் தரும் என தெரிகிறது. இதில் எக்ஸ்டன்ஷன் வசதியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நிறுவனத்தின் பிற ஊழியர்களுடன் எளிதில் இணையலாம். இந்த சேவையை பெற பயனர்கள் ஸூம் தளத்தில் செட்-அப் செய்ய வேண்டி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.