இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் மீதான வரி விதிப்பினால் உள்நாட்டு விவசாயிகள் தனது விளைச்சலை நியாயமான விலையில் விற்பனை செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை, புத்தசாசன, மத கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர்; விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நாட்களில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு வருவதாகவும், இவ்வாறான நிலையில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் போன்றவற்றின் இறக்குமதி அதிகரித்தால், உள்நாட்டு விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்க நேரிடும் என்றும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
எனவே, உருளைக்கிழங்கு இறக்குமதிக்கான கிலோ ஒன்றுக்கு 50 ரூபாவாக இருந்த வரியை 10 ரூபாவினாலும், வெங்காயத்திற்கான 10 ரூபாக இருந்த வரியை 20 ரூபாவினால் அதிகரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு; விவசாயிகளுக்கு தமது பயிர்களை நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கும் நோக்கில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.