ஜெருசலேம்,
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டது.
அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர். அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த சூழ்நிலையில் இஸ்ரேல் மீது இன்று ராக்கெட் தாக்குதல் நடத்தியது.
காசா முனையில் இருந்து ஹமாஸ் ஆயுதக்குழுவின் ராணுவ பிரிவான குவாசம் பிரிகேட் இந்த ராக்கெட் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் நோக்கி ஏவப்பட்ட ராக்கெட்டுகள் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலின் அனைத்து முக்கிய நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என்று பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் நடத்திய தாக்குதல்களின் முதல் ஆண்டு நிறைவை குறிக்கும் சிறப்பு இரங்கல் கூட்டத்தில் பேசிய அவர், “ஹமாசின் தீய ஆட்சியை தூக்கியெறிவது, இறந்தவர்கள் மற்றும் உயிருடன் இருப்பவர்கள் என அனைவரையும் வீடுகளுக்குத் திருப்பி அனுப்புவது, காசாவில் இருந்து இஸ்ரேலுக்கு வரப்போகும் அச்சுறுத்தலை முறியடிப்பது, எங்களுடைய குடியிருப்பாளர்களைத் திருப்பி அனுப்புவது என நாங்கள் நிர்ணயித்த அனைத்து இலக்குகளையும் முடித்தவுடன் தான் போரை முடிப்போம்.
ஒரு வருடத்திற்கு முன்பு, இதே நாள் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் அரசுக்கு எதிராக, இஸ்ரேல் குடிமக்களுக்கு எதிராக ஒரு கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்தப் படுகொலைக்குப் பிறகு, டெல் அவிவில் நடந்த பேரணியில், ஒரு போரில். எதிரி இதுவரை அறிந்திராத ஒரு சக்தியுடன் நாம் எதிர்த்துப் போரிடுவோம், மேலும் அவர்கள் அறிந்திராத விலையை பெறுவோம். நாங்கள் கண்டிப்பாக போரிடுவோம். நாங்கள் அதை வெல்வோம் என்று கூறினேன்.
நாங்கள் எங்கள் பிராந்தியத்தில் பாதுகாப்பு யதார்த்தத்தை மாற்றுகிறோம். எங்கள் குழந்தைகளுக்காக, எங்கள் எதிர்காலத்திற்காக, அக்டோபர் ஏழாம் தேதி நடந்தது மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்கிறேன்.
இலக்கை அடைந்த பிறகே இஸ்ரேல் போர் முடிவுக்கு வரும். இஸ்ரேலின் அனைத்து முக்கிய நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும். இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஈரானுடன் எதிர்தாக்குதல் நடத்துவது அவசியம்” என்று நெதன்யாகு கூறினார்.