ஈஸ்டர் தாக்குதலுக்கு வழிவகுத்தவர்களுக்கு எதிராக கண்டிப்பாக சட்டம் அமுல்படுத்தப்படும் என்பதாகவும், ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே அதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் வெகுஜன ஊடகத்துறை, புத்தசாசன, மத கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர்; விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்..
‘இதற்காக நாம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளோம். அந்தக் குழுவின் ஊடாக, ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால், அது குறித்து ஆராயப்பட்டு, ஆணைக்குழுவின் அறிக்கைகளில் குறைபாடு உள்ளதா என ஆராயப்படும்.
ஜனாதிபதி நியமிக்கப்பட்டு குறுகிய காலத்திலேயே இது தொடர்பான செயற்பாடுகளை நாம் ஆரம்பித்துள்ளோம். இதற்கு முன்னர் ஏற்பட்ட தவறுகளை இந்த அரசாங்கத்தின் கீழ் ஏற்பட அனுமதிக்க மாட்டோம் என்பதுடன், நாட்டு மக்களுக்கு அநீதி நடக்கவும் இடமளிக்க மாட்டோம் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.