சென்னை: காலாண்டு தேர்வு தொடர் விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
நடப்பு கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் மற்றும் முதல் பருவ தேர்வுகள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற்றன. இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு செப்டம்பர் 28-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டது. அக்டோபர் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. அக்கோரிக்கையை ஏற்று காலாண்டு விடுமுறை அக்டோபர் 6-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் நேற்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் அனைவரும் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனர். பெரும்பாலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு பள்ளி திறந்த முதல் நாளிலேயே வழங்கப்பட்டன.