கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் கொல்கத்தாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. தன்னார்வலராக காவல் துறையினருக்கு உதவிகள் செய்துவந்த தற்காலிக பணியாளர் சஞ்சய் ராய்தான் பெண் மருத்துவரை வன்கொடுமை செய்து கொன்றுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
இதை கண்டித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. இந்த நிலையில், கொல்கத்தாவின் சீல்டா பகுதியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று 45 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதில், 200 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தன்னார்வலராக காவல் துறையினருக்கு உதவிகள் செய்துவந்த தற்காலிக பணியாளர் சஞ்சய் ராய், இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர், தொடர்ந்து பணியில் ஈடுபட்டதால் ஏற்பட்ட சோர்வு காரணமாக, நள்ளிரவில் ஓய்வெடுக்க கருத்தரங்க கூடத்துக்கு சென்றுள்ளார். அடுத்த நாள் காலையில் அவர் சடலமாக கிடப்பதை பார்த்த சக மருத்துவர்கள், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஆகஸ்ட் 9-ம் தேதி அதிகாலை 4.03 மணிக்கு கருத்தரங்க கூடத்துக்கு சஞ்சய் ராய் வந்ததும், 30 நிமிடங்கள் கழித்து அவர் வெளியேறியதும் தெரியவந்துள்ளது.
உடற்கூறாய்வு அறிக்கைப்படி, பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளார். அவரது உடலின் உட்புறமும் வெளிப்புறமும் 25 காயங்கள் இருந்தன. அவரது விரல் நகங்களில் இருந்த ரத்த மாதிரி, சஞ்சய் ராயின் ரத்தத்துடன் பொருந்துகிறது. எனவே, பெண் மருத்துவரை சஞ்சய் ராய்தான் வன்கொடுமை செய்து கொன்றுள்ளார் என்பது உறுதியாகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்படவில்லை.
முன்னதாக, சஞ்சய் ராயிடம் சிபிஐ அதிகாரிகள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினர். அப்போது, தனக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என கூறியிருந்தார்.
கொலை சம்பவம் நடந்த பிறகு, கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் ராஜினாமா செய்தார். அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
பெண் மருத்துவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்து அவரது பெற்றோர், மருத்துவமனைக்கு சென்றபோது, அவர்களிடம் சடலத்தை காட்டாமல் 3 மணி நேரம் காக்க வைத்ததாகவும், தடயங்களை அழிக்க முயன்றதாகவும் கோஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த கொலையை தற்கொலை என சித்தரிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இறுதி வரை போராட்டம்: இதற்கிடையே, ‘மாநில சுகாதார துறை செயலர் என்.எஸ்.நிகாமை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்பன உட்பட 9 கோரிக்கைகளை முன்வைத்து, இளநிலை மருத்துவர்கள் 6 பேர் கடந்த 5-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். “இந்த வழக்கை சிபிஐ மெதுவாக விசாரித்து வருகிறது. உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்தினருக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இது எங்கள் கடைசி முயற்சி’’ என்று அவர்கள் கூறினர்.