கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 50 மூத்த மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர், கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இதற்கு நீதி கேட்டு அந்த கல்லூரியின் பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக ஆர்.ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 50 மூத்த மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேலும், அவர்கள் பயிற்சி மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளனர்.
பயிற்சி மருத்துவர்களின் தொடர் போராட்டத்துக்கு பொதுமக்களும் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு பள்ளி, கல்லூரிகளின் மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் 50 மூத்த மருத்துவர்கள் ராஜினாமா செய்துவிட்டு பயிற்சி மருத்துவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கி இருப்பது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.
பயிற்சி மருத்துவர்களுக்கு ஆதரவாக போராட்டக் களத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் 52 வயதான மூத்த மருத்துவர் சங்கமித்தா பட்டாச்சார்யா, “ஒரு வீட்டில் அதிக அளவில் கரையான்கள் இருந்தால், அந்த வீட்டிற்கு சரியான கரையான் சிகிச்சை தேவை. அதேபோன்ற கரையான் சிகிச்சையை மருத்துவர்கள் விரும்புகிறார்கள். ஊழல் அதிகாரிகளை அகற்ற வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து கோருகிறார்கள், இதில் எந்த தவறும் இல்லை.
சிபிஐயின் சமீபத்திய குற்றப்பத்திரிகை திருப்தி அளிப்பதாக இல்லை. பயிற்சி மருத்துவர் இறந்த விதம், அவரது கால்கள் முறுக்கப்பட்ட விதம் எல்லாம் அனைவரும் அறிந்ததே. சஞ்சய் ராய் மட்டுமே குற்றவளி என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சஞ்சய் ராய் ஒரு பெரிய ராட்சசனாகவோ அல்லது பெரிய அசுரனாகவோ இருந்திருந்தால் மட்டுமே அது சாத்தியமாகியிருக்கும்” என குறிப்பிட்டார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியரான 39 வயது தேபப்ரதா தாஸ், தனது 9 வயது மகளையும் அழைத்து வந்திருந்தார். பயிற்சி மருத்துவர்களுக்கான தனது ஆதரவு குறித்து பேசிய அவர், “நீதி மற்றும் போராட்டத்தின் அர்த்தத்தைப் பார்க்க என் மகளுடன் இன்று நான் இங்கு வந்தேன். இந்த மருத்துவர்கள் நம் அனைவரின் நலனுக்காக நீதிக்காக போராடுகிறார்கள். நீதியை எப்படிக் கோருவது என்பதை என் மகள் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஜெய்நகர் பகுதியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அது குறித்து அறிந்ததில் இருந்து என் மகளை நினைத்து நான் பயப்படுகிறேன். சிபிஐ தற்போது அதன் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. கூடுதல் குற்றப்பத்திரிகைகளும் வரும். இது ஒரு நிறுவன கொலை. இதுபோன்ற வழக்கில் பொதுவாக ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருப்பார்கள். இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என்று நினைக்கிறேன்” என கூறினார்.
போராட்ட பந்தளில் உள்ள மருத்துவர்கள் பல நாட்களாக உண்ணாவிரதம் இருப்பதால் அவர்களின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பலரும் சோர்வாக உள்ளனர். அவர்களால் எழுந்து நின்று கோஷமிடவும் முடியாத நிலை உள்ளது. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் முக்கிய பரிசோதனை முடிவுகள் குறித்து போராட்ட பந்தளில் உள்ள பலகையில் தினமும் குறிப்பிடப்படுகிறது. மருத்துவர்கள் தங்களை தொடர்ந்து வருத்திக்கொள்வதை அறியும் பொதுமக்கள் பெருமளவில் கூடி தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
மிட்னாபூரில் இருந்து தினமும் கொல்கத்தாவுக்கு வந்து போராட்டக் களத்தில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டுள்ள 27 வயது பயிற்சி மருத்துவர் சோஹம் பால், “நான் தினமும் காலை 9 மணிக்கு போராட்ட இடத்திற்கு வந்து இரவு 9-10 வரை தங்குவேன். சக பயிற்சி மருத்துவர்களை ஆதரிப்பதற்காக அந்த நேரங்களில் நானும் உண்ணாவிரதம் இருக்கிறேன். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அரசின் செயல்முறை மிகவும் மெதுவாக உள்ளது.
அரசாங்கம் விரும்பினால் அவர்கள் மிக எளிதாக எங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் விரும்பவில்லை. ஏனெனில் இதில் ஆழமாக ஊழல் மற்றும் அச்சுறுத்தல் கலாச்சாரம் உள்ளது. அது பிரச்சினைகளை உருவாக்கக்கூடும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். சஞ்சய் ராய் மட்டுமே குற்றவாளியா? போலீஸ் கமிஷனர் முதல் முதல்வர் வரை அனைவரும் சாட்சியங்களை சிதைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றால் சஞ்சய் ராய் அந்த அளவுக்குச் செல்வாக்கு மிக்கவரா? நிச்சயமாக இதில் யாரோ பெரிய மனிதர்கள் ஈடுபட்டுள்ளனர்” என தெரிவித்தார்.
மற்றொரு பயிற்சி மருத்துவரான அபித் ஹாசன், “அரசாங்கம் எதுவும் செய்யாது என்பது எங்களுக்குத் தெரியும். ஆதாரங்களை மறைத்து சிதைப்பதில் ஈடுபட்டுள்ள அரசாங்கத்திடம் இருந்து இதற்கு மேல் எதையும் எதிர்பார்க்க முடியாது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஆனால் அவர்கள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை மோசமாக உள்ளது. அவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. அவர்களின் கூற்றுப்படி, சஞ்சய் ராய் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர். உண்மை என்னவென்றால், அவருக்கு மேலே உள்ள நபர் யார் என்பதை திட்டமிட்டு மறைக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் கூட எங்களுக்கு சாதகமாக செயல்படவில்லை” என தெரிவித்தார்.
இதனிடையே, மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக அகில இந்திய மருத்துவ சங்கம் (FAIMA) நாளை (அக். 09) நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது.