மும்பையில் தாராவி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது தமிழர்கள்தான். குட்டித்தமிழ்நாடாக கருதப்படும் தாராவியில் உள்ள குடிசைகள்தான் உலக அரங்கில் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அக்குடிசைகளை இடித்துவிட்டு தாராவியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை அதானி நிறுவனம் கையில் எடுத்து இருக்கிறது.
இவ்வாறு கட்டப்படவுள்ள குடியிருப்புகளுக்காக மும்பைக்கு வெளியில் நிலம் தேடும் பணியில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டிருந்தது. முலுண்ட், பாண்டூப், காஞ்சூர்மார்க் பகுதியில் உள்ள 256 ஏக்கர் உப்பள நிலத்தை மத்திய அரசு இத்திட்டத்திற்காகக் கொடுத்திருக்கிறது.
ஆனால் தாராவி மக்களை முலுண்ட் கொண்டு வர அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தாராவி மக்கள் முலுண்ட் வந்தால் இப்பகுதியில் கடுமையான மக்கள் நெருக்கடி ஏற்படும் என்றும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். அதோடு முலுண்ட்டில் தாராவி மக்களுக்கு வீடு கட்டப்படுவதை எதிர்த்து சமூக சேவகர் தேவ்ரே மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். உப்பள நிலத்தில் வீடுகள் கட்டப்படுவதால் கடல் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார்.
தாராவி மக்களுக்கு மும்பை மேற்கு புறநகர்ப் பகுதியிலும் வீடுகள் கட்ட அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக மும்பை மலாடு பகுதியில் கடலில் இருக்கும் மத் தீவில் 100 ஏக்கர் நிலத்தை ஒதுக்க மாநில அரசு பரிசீலித்து வருகிறது. மத் தீவில் மீனவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அதோடு பங்களாக்கள் மற்றும் திரைப்படப் படப்பிடிப்பு ஸ்டூடியோக்கள் அதிக அளவில் இருக்கிறது.
இங்கு மொத்தம் 180 ஏக்கர் நிலம் அரசிடம் இருக்கிறது. அதில் 100 ஏக்கரை தாராவி திட்டத்திற்கும், எஞ்சிய நிலத்தை பிர்லா நிறுவனம் கட்ட இருக்கும் மருத்துவமனை, திரைப்பட அகாடமி, சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு மற்றும் கோயில் கட்ட பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY