திலகபாமா, பொருளாளர், பா.ம.க
“எங்கள் தலைவர் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மை. செந்தில் பாலாஜி அ.தி.மு.க-விலிருந்த சமயத்தில், இன்றைய முதல்வர் தொடங்கி தி.மு.க மூத்த நிர்வாகிகள் வரை பலரும் செந்தில் பாலாஜி மீதும், அவரின் தம்பி மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதே செந்தில் பாலாஜி தி.மு.க-வில் இணைந்ததுமே ‘அவர்மீது தொடரப்பட்ட வழக்கு அனைத்தும் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் போடப்பட்டவை’ என்று மாற்றிப் பேசினார்கள். திராவிட மாடல் வாஷிங் மெஷினுக்குள் விழுந்ததுமே எவரும் ஊழல் குற்றமற்ற புனிதராக மாறிவிடுகிறார்கள். இதைத்தான் எங்கள் தலைவர் சொல்லியிருக்கிறார். அதிலும், ஜாமீனில் வெளிவந்த பாலாஜியை ‘தியாகி’ என்று புகழ்வதெல்லாம் அரசியல் அநாகரிகம். அவருக்கு இரண்டே நாள்களில் அமைச்சர் பொறுப்பு கொடுத்து பதவியேற்கச் செய்திருப்பது அவசியமற்றது. இதுவரை, 162 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பரந்தூரில் 800 நாள்களைத் தாண்டி போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், மகனைத் துணை முதல்வராக்குவதிலும், ஜாமீனில் வெளியே வந்தவரை அமைச்சராக்குவதிலுமே குறியாக இருக்கிறது இந்த அரசு. மக்கள் வெகுண்டெழுந்து இந்த அரசைத் தூக்கியெறியும் நாள் வெகுதொலைவில் இல்லை!”
எஸ்.ஏ.எஸ். ஹபீசுல்லா, செய்தித் தொடர்பு துணைச் செயலாளர், தி.மு.க
“அர்த்தமில்லாத பேச்சு. தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுகிற பா.ம.க… ஊழல், ஒழுக்கம் குறித்துப் பேசுவதற்கும், தி.மு.க-வை விமர்சிப்பதற்கும் கொஞ்சமும் அருகதை அற்ற கட்சி. முதலில் செந்தில் பாலாஜி மீது தி.மு.க எந்த வழக்கும் தொடரவில்லை என்ற உண்மையை ராமதாஸ் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் தி.மு.க-வில் இணையும் முன்பாகவே அவர்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் விளக்கம் கொடுத்து, அதைத் தலைமையிலிருந்து ஆராய்ந்த பிறகே அவர் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். ஆனால், பா.ஜ.க தனது சுயலாபத்துக்காக அவர்மீதான வழக்கைத் தோண்டியெடுத்து கைதுசெய்ய வைத்தது. அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக, செந்தில் பாலாஜி மீது வீண் அவதூறுகளைப் பரப்புகிறார்கள். இதே ராமதாஸ், தன்னுடைய மகன் அன்புமணி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதை அறியாதவரா… தன் மகனை அவர் ஊழல்வாதி என்று அழைப்பாரா… ‘ஓர் ஊழல்வாதியிடம் பா.ம.க தலைமைப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார்’ என்று சொன்னால் ஏற்றுக்கொள்வாரா… செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை முன்வைத்த எந்தக் குற்றச்சாட்டையும் அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. விரைவிலேயே தன்மீதான வழக்குகளை உடைத்தெறிவார் செந்தில் பாலாஜி!”