புதுடெல்லி: கடந்த 2008 அக்டோபர் 22-ம்தேதி ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான் 1 விண்கலம் ஏவப்பட்டது. இது நிலவை 312 நாட்கள் சுற்றியது. நிலவில் தண்ணீர் இருந்ததற்கான தடயங்களை சந்திரயான் -1 விண்கலம் கண்டுபிடித்தது. இதன் திட்ட இயக்குநராக தமிழ்நாட்டை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை பணியாற்றினார்.
கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 2019 செப்டம்பர் 8-ம் தேதி அந்த விண்கலம் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சந்திரயான்-2 நிலவில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லேண்டர், ரோவர் சேதமடைந்தன. எனினும் ஆர்பிட்டர் நிலவை சுற்றி வட்டமடித்து ஆய்வு செய்தது. சந்திரயான் 2 திட்ட இயக்குநராக சென்னையை சேர்ந்த முத்தையா வனிதா பணியாற்றினார்.
கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை14-ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. சந்திரயான்-3 திட்ட இயக்குநராக தமிழ்நாட்டை சேர்ந்த வீரமுத்துவேல் பணியாற்றினார்.
அடுத்த கட்டமாக சந்திரயான்-4 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பர் 18-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த திட்டம் வரும் 2027-ம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதன்மூலம் நிலவில் இருந்து 3 கிலோ அளவுக்கு கனிமங்களை இந்தியாவுக்கு எடுத்து வர திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இதைத் தொடர்ந்து சந்திரயான்-5 திட்டத்துக்கு தேசிய விண்வெளி ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டத்தை இந்தியாவும் ஐப்பானும் இணைந்து மேற்கொள்ள உள்ளன. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது:
சந்திரயான் -5 திட்டத்தை இந்தியாவும் ஐப்பானும் இணைந்து செயல்படுத்த உள்ளன. இந்த திட்டத்துக்கு நிலவு துருவ ஆய்வு திட்டம் (லூபெக்ஸ்) என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இரு நாடுகளின் கூட்டு திட்டத்தில் ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம், ரோவரை தயாரிக்க உள்ளது. இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் லேண்டரை தயாரிக்க உள்ளது. இது மிகப்பெரிய திட்டம் ஆகும். கடந்த ஓராண்டாக லேண்டர், ரோவருக்கான வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
சந்திரயான்-5 திட்டத்தில் அதிகசக்தி வாய்ந்த, அதிக எடை கொண்ட லேண்டர், ரோவரை பயன்படுத்த உள்ளோம். இது நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான முன்னோடி திட்டமாகும். இவ்வாறு இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
ஜப்பான் விஞ்ஞானிகள் கூறியதாவது: இந்தியாவும் ஜப்பானும் இணைந்து லூபெக்ஸ் திட்டத்தை செயல்படுத்த உள்ளன. நிலவில் தண்ணீர் இருக்கிறதா, நிலவில் என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பது குறித்து லூபெக்ஸ் திட்டத்தின் மூலம் ஆய்வு செய்யப்படும்.
இந்த திட்டத்துக்கான ரோவரை ஜப்பான் தயாரிக்கிறது. இதில் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி மையத்தின் அதிநவீன கருவிகளும் பொருத்தப்பட உள்ளன. நிலவின் அடிப்பகுதி மற்றும் நிலவின் தனிமங்களை ரோவர் சேகரிக்கும். அவை பூமிக்கு கொண்டு வரப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.