சென்னை: தென்மேற்கு பருவமழை, வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்ததால் கடந்த செப்டம்பரில் 24 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கிணறுகள் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை நீர்வள ஆதாரத் துறை மாதம்தோறும் கணக்கிட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, செப்டம்பரில் 24 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 2.05 மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இங்கு கடந்த மாதம் 6.99 மீட்டர் ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர் இந்த மாதம் 4.04 மீட்டரில் உள்ளது.
அதேபோல, மாவட்ட வாரியாக பெரம்பலூர் 1.67, விழுப்புரம் 1.52, சேலம் 1.12 மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நாமக்கல் 0.98, கள்ளக்குறிச்சி 0.75, கடலூர் 0.67, சிவகங்கை 0.63, திருப்பத்தூர் 0.62 திருச்சி 0.58, திருப்பூர் 0.53 மீட்டர் என அரை மீட்டருக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஈரோடு 0.47, திருவாரூர் 0.40, கரூர் 0.39, புதுக்கோட்டை 0.39, வேலூர் 0.36, அரியலூர் 0.22, காஞ்சிபுரம் 0.20, செங்கல்பட்டு 0.20, தருமபுரி 0.19, நாகை 0.18, ராணிப்பேட்டை 0.11, விருதுநகர் 0.09, மயிலாடுதுறை 0.06 மீட்டர் என சொற்பமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இவ்வாறு மொத்தம் 24 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தஞ்சாவூரில் நிலத்தடி நீர்மட்டம் அதிகபட்சமாக 1.04 மீட்டர் குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்டில் 1.57 மீட்டர் ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் செப்டம்பரில் 2.61 மீட்டர் ஆழத்துக்கு சென்றுவிட்டது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி என மொத்தம் 13 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது என்று நீர்வள ஆதாரத் துறை தெரிவித்துள்ளது.