சென்னை: 8 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட்டின் இறுதி நிலையான பிஎஸ் 4 இயந்திரம் வெற்றிகரமாக அட்லாண்டிக் கடலில் விழ வைக்கப்பட்டது.
விண்வெளி ஆய்வில் சந்திரயான், மங்கள்யான், ஆதித்யா எல்-1 உள்ளிட்ட பல்வேறு அரிய சாதனைகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிகழ்த்தி வருகிறது. அந்தவகையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட் மூலம் இந்திய மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 104 செயற்கைக்கோள்களை ஒரே ஏவுதலில் இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தி சாதனை படைத்தது. இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதால் உலகளவில் ஒரே ஏவுதலில் அதிக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய நாடு எனும் பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. அதன்பின் அந்த சாதனையை 2021-ம் ஆண்டு பால்கன்-9 ராக்கெட் மூலமாக ஒரே முறையில் 143 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முறியடித்தது.
இதற்கிடையே பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட்டின் இறுதி நிலையான பிஎஸ் 4 இயந்திரமானது செயற்கைக்கோள்களை நிலைநிறுத்திய பின்னர், புவி தாழ்வட்ட சுற்றுப்பாதையிலேயே விடப்பட்டது. அது விண்வெளிக் கழிவாக மாறாமல் இருக்க அந்த பிஎஸ்-4 இயந்திரத்தின் சுற்றுப்பாதையை படிபடியாக குறைத்து பூமிக்கு கொண்டுவர முயற்சிக்கப்பட்டது. அதன்படி 8 ஆண்டுகளுக்கு பின்பு கடந்த அக்டோபர் 6-ம் தேதி தரையில் இருந்து 134 கி.மீ உயரத்துக்கு புவியின் வளிமண்டலப் பகுதிக்குள் பிஎஸ்-4 இயந்திரம் வந்தடைந்தது. தொடர்ந்து இரவு 7 மணியளவில் பிஎஸ்-4 இயந்திரம் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்தது. விண்வெளிக் கழிவுகளால் ஏற்படும் இடர்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விண்வெளியில் கழிவுகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக நாசா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது