ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போனது ஏன்? – ஒரு பார்வை

புதுடெல்லி: ஹரியானாவின் தேர்தல் கருத்துக்கணிப்பை பொய்யாக்கி, பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இச்சூழலில், காங்கிரஸின் தோல்வி நிலைக்கு காரணம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஹரியானாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு எதிரான சூழல் நிலவியது. இதனால், ஆளும் பாஜகவுக்கும் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே இங்கு நேரடிப் போட்டி இருந்தது. துவக்கம் முதலே இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி உறுதி என்ற நிலை உருவாகி இருந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளிலும் காங்கிரஸுக்கு வெற்றி உறுதி எனக் கணிக்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் எழுந்துள்ளன. பாஜக 48 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. இந்த எண்ணிக்கை, கடந்த 2019 தேர்தலைவிட அதிகம். இந்த அளவுக்கு காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள் வெளியாகி உள்ளன.

ஹரியானாவில் ஜாட் சமூகத்தினர் சுமார் 22 சதவிகிதம் இருக்கின்றனர். விவசாயிகள் தொடர்பான முடிவுகளை ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்களே எடுக்கின்றனர். இதனால், இங்கு விவசாயிகளாக உள்ள முஸ்லிம்களும் கூட, அவர்களுடைய முடிவுகளுக்கு சிலசமயம் ஒத்துப்போய் விடுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஜாட்களின் வாக்குகளை எந்தக் கட்சி பெறுகிறதோ அவர்களே உறுதியாக வெற்றி பெறுவார்கள் என்றொரு கருத்தும் உண்டு.

இந்த முறை, மாநிலத்திலும், மத்தியிலும் ஆளும் பாஜகவுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ் கட்சியும் வெளிப்படையாக ஆதரவளித்திருந்தது. இதனால், இந்த தேர்தலில் விவசாயிகளின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கடைசி நேரத்தில் ஜாட்களை தன் பக்கம் இழுப்பதில் பாஜக வெற்றி கண்டிருப்பது தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டுள்ளது.

இதுபோல், ஜாட் உள்ளிட்ட உயர்குடிமக்களுடன் சேர்த்து ஒபிசி பிரிவினரையும் தன்பக்கம் இழுப்பதில் பாஜகவுக்கு வெற்றி பெற்றுள்ளது. இதனால், பாஜகவுக்கு முந்தைய தேர்தலை விட அதிகமான தொகுதிகள் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது, ஒபிசி வாக்குகள் இல்லாமல் சாத்தியமற்றது எனக் கருதப்படுகிறது. இவற்றுடன் தலித்துகளும் பாஜகவுக்கு பல தொகுதிகளில் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.

இதர மாநிலங்களை போல் ஹரியானாவிலும் தலித் வாக்குகள் சுமார் 20 சதவிகிதம் உள்ளது. சிறுபான்மை முஸ்லிம் மற்றும் சீக்கியர் வாக்குகளும் கணிசமாக உள்ளது. இவை வழக்கம் போல், காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளன. இத்துடன் காங்கிரஸுக்கு ஓரளவுக்கு கிடைத்த தலித் வாக்குகளும் அதன் வெற்றிக்கானப் பலனை தரவில்லை. இக்காரணங்களுடன் காங்கிரஸின் கோஷ்டி பூசலும் அதன் தோல்விக்கு வழிவகுத்து விட்டன.

முன்னாள் முதல்வரான பூபேந்தர் ஹுட்டா, முன்னாள் மத்திய அமைச்சரும் எம்பியுமான குமாரி ஷெல்ஜா ஆகிய இருவர் முக்கிய கோஷ்டி தலைவர்கள். இவர்களில் பூபேந்தர் ஹுட்டாவின் கை ஓங்கியிருந்ததால், குமாரி ஷெல்ஜாவின் ஆதரவாளர்கள் ஒத்துழைப்பு காங்கிரஸ் பிரச்சாரங்களில் குறைந்ததாகப் புகார் கூறப்படுகிறது. கடைசிநேரத்தில் ராகுல் காந்தி தலையிட்டதால் இக்கோஷ்டி பூசல் ஓரளவுக்கு அடங்கியதாக கூறப்படுகிறது.

ஹரியானாவில் போட்டியிட்ட இதர கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் ஆதரவை பிரிக்கக் கூடியவை. இந்தப் பட்டியலில் முன்னாள் ஆளும் கட்சியான இந்திய லோக் தளம் கட்சி, அதன் கூட்டணியான பகுஜன் சமாஜ், இரண்டாம் முறை பாஜக ஆட்சி அமைய காரணமாக ஜேஜேபி, இண்டியா கூட்டணியின் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை இருந்தன. இவர்களுடன் ஹரியானாவில் அதிக செல்வாக்குகள் கொண்ட சுயேச்சை வேட்பாளர்களும் காங்கிரஸ் வாக்குகளை பிரிப்பவர்களாகவே இருந்தனர்.

ஹரியானா தேர்தலுக்கு முன்பாக உருவான இண்டியா கூட்டணியில் காங்கிரஸுடன் சேர்த்து ஆம் ஆத்மி கட்சியும் இருந்தது. இதனால், இருவரும் ஹரியானா போட்டிக்காக கூட்டணி அமைக்க முயன்றனர். அப்போது ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவால் சிறையில் இருந்தார். அவரது கட்சியினர் 20 தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் கட்சியிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு பத்து தொகுதிகள் வரை ஒதுக்கும் மனநிலையில் இருந்தது. அப்போது ஹரியானாவின் மூத்த தலைவரான பூபேந்தர் ஹுட்டாவின் யோசனையை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது தவறாகி விட்டது. இந்தமுறை தனது வெற்றியில் அளவுக்கு அதிகமான நம்பிக்கையை பூபேந்தர் ஹுட்டா கட்சித் தலைமைக்கு ஊட்டி விட்டார். அவரது யோசனையை ஏற்ற காங்கிரஸ் ஆம் ஆத்மியை கூட்டணியில் சேர்க்க மறுத்து விட்டது.

இன்று வெளியானா ஹரியானா முடிவுகளில் பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் சுமார் ஆயிரம் வாக்குகளில் காங்கிரஸின் வெற்றி கைநழுவி உள்ளது. அதேசமயம், அந்த எண்ணிக்கையிலான வாக்குகளை ஆம் ஆத்மி பல தொகுதிகளில் பெற்றுள்ளது. இதுபோன்ற சூழல்கள், ஹரியானாவில், பாஜக ஆட்சியை மூன்றாம்முறை தொடரக் காரணமாகி விட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.