புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் தலித் ஆதரவுக் கட்சிகள் ஹரியானா தேர்தலில் கூட்டணியாகப் போட்டியிட்டன. இதில், மாயாவதியின் பிஎஸ்பிக்கு மட்டும் ஒரு தனித் தொகுதி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஹரியானாவிலும் சுமார் 20 சதவிகிதம் தலித் வாக்குகள் உள்ளன. இதைநம்பி கடந்த 2000-ம் ஆண்டு தேர்தல் முதல் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) ஹரியானாவில் போட்டியிட்டு வருகிறது. இந்தமுறை அக்கட்சியின் வேட்பாளர் அத்தர் லால், ஹரியானாவின் தனித் தொகுதியான அத்தேலியில் முன்னணி வகிக்கிறார். இவர், பாஜகவின் வேட்பாளர் ஆர்த்தி சிங் ராவ், காங்கிரஸின் அனிதா யாதவ் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
2019-ஐ போலேவே ஹரியானாவில் அபய் சவுதாலா தலைமையிலான இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) கட்சியுடன் கூட்டணி வைத்தார் மாயாவதி. ஹரியானாவின் 90 தொகுதிகளில் பிஎஸ்பி 37 மற்றும் ஐஎன்எல்டி 53 தொகுதிகளில் போட்டியிட்டன. இதில் ஐஎன்எல்டியின் வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர். ஐஎன்எல்டியின் வெற்றியில் பிஎஸ்பிக்கான தலித் வாக்குகளும் கணிசமாக சேர்ந்துள்ளன.
மாயாவதி கட்சிக்கு போட்டியாக உபியில் சந்திரசேகர் ஆஸாத் எம்பியின், ஆஸாத் சமாஜ் பார்ட்டி கன்ஷிராம் (ஏஎஸ்பி) கட்சி வளர்கிறது. இக்கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக உபியில் ஒரு தொகுதி கிடைத்திருந்தது. இதனால், உற்சாகமடைந்த ஏஎஸ்பி, ஹரியானாவில் ஜனநாயக் ஜனதா பார்ட்டியுடன் (ஜேஜேபி) இணைந்து 12 தொகுதிகளில் போட்டியிட்டது. தலித் வாக்குகளை நம்பிய ஏஎஸ்பிக்கு ஒரு தொகுதி கூடக் கிடைக்கவில்லை.
இக்கட்சியின் பலன் அதன் கூட்டணியான ஜேஜேபிக்கும் கிடைக்கவில்லை. கடந்த தேர்தலில் பத்து தொகுதிகள் பெற்ற ஜேஜேபி இந்தமுறை, ஒரு தொகுதியும் பெறவில்லை.
ஜேஜேபியின் தலைவரான துஷ்யந்த சவுதாலா 2019-ல் பாஜகவுக்கு ஆதரவளித்து துணை முதல்வராகவும் இருந்தவர். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக முதல்வர் மனோகர் லால் கட்டர் மாற்றப்பட்டபோது தம் ஆதரவை விலக்கிக் கொண்டவர்.
ஆம் ஆத்மியின் நிலை: ஹரியானாவில் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு தொகுதியும் கிடைக்கவில்லை. அண்டை மாநிலங்களான டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சி அமைத்தும், ஹாியானாவில் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதற்கு முன்பும் ஹரியானாவின் இரண்டு சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட்டும் ஆம் ஆத்மிக்கு ஒரு தொகுதிக்கூட கிடைக்காதது நினைவுகூரத்தக்கது.