சண்டிகர்: ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பிற்பகலில் முடிவுகள் தெரியும்.
மொத்தம் 90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த மாநிலத்தில் பாஜக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த 2 கட்சிகள் தவிர இந்திய தேசிய லோக் தளம் – பகுஜன் சமாஜ் கூட்டணியும், ஜனநாயக ஜனதா கட்சி – ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணியும் களத்தில் உள்ளன. காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஆம் ஆத்மி கட்சி தனித்து களமிறங்கியது.
90 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில்,ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீர் தேர்தல்: 90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமாக 63.88 சதவீத வாக்கு கள் பதிவாகின. ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெற்றுள்ளது. மேலும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது என்பதால் இத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இங்கு தேசிய மாநாடு கட்சியும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில், பாஜகவும், மக்கள் ஜனநாயக கட்சியும் முக்கிய போட்டியாளர்களாக உள்ளன.
இத்தேர்தலில் காங்கிரஸ் – தேசிய மாநாடு கட்சி கூட்டணி பெரும்பான்மைக்கு சற்று குறைவாக 43 இடங்களிலும், பாஜக 27, மக்கள் ஜனநாயக கட்சி 7, மற்றவர்கள் 13 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்று தேர்தலுக்கு பிந் தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குதொடங்குகிறது. பிற்பகலில் முடிவுகள் தெரியவரும். தேர்தல் ஆணைய இணையதளத்தில் (results.eci.gov.in. அல்லது eci.gov.in) முடிவுகள் வெளியாகும்.